திருவனந்தபுரம்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் 7வது நாளாக பங்கேற்று நடந்து செல்கின்றனர். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,500 கி.மீ. தூரம், நடைப்பயணத்தை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, கடந்த புதன்கிழமை தொடங்கினார். களியக்காவிளை அருகே உள்ள தலைச்சன்வளையில், கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் பயணத்தை நிறைவு செய்த அவர், நேற்று முன்தினம் முதல் கேரள மாநிலத்தில் ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். இரவு ஓய்வு எடுத்துக்கொண்ட ராகுல் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் வெள்ளையானை சந்திப்பில் இருந்து 7வது நாளாக பயணத்தை தொடங்கினர்.
கேரளாவில் மட்டும் 18 நாட்களில் 450 கி.மீ. தூரம் வரை ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதனை விமர்சித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, கேரளாவில் 18 நாட்கள், உத்திரபிரதேசத்தில் 2 நாட்கள் மட்டுமே நடைபயணம் என்று கூறியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் கார்ட்டூன் ஒன்றை அக்கட்சி வெளியிட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பாஜகவின் எ டீம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்று விமர்சித்துள்ளார்.