மேற்குவங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விசாரிக்கப்பட்டதற்குப் பிறகு பல அரசியல் முன்னெடுப்புகளை பா.ஜ.க செயல்படுத்திவருகிறது. அதைத் தொடர்ந்து இன்று கொல்கத்தாவில் ‘நபன்னா அபிஜன்’ (செயலகத்திற்கு அணிவகுப்பு) நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்கத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பா.ஜ.க உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் கலந்துக்கொள்ள பா.ஜ.க 7 ரயில்களை வாடகைக்கு எடுத்திருக்கிறது.
இது தொடர்பாக, மேற்குவங்க பா.ஜ.க மூத்த தலைவரும் அக்கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவருமான ராகுல் சின்ஹா செய்தியாளர்களிடம், “பேரணியில் சேர நகரத்திற்கு வர விரும்பும் ஆதரவாளர்களைத் தடுக்க பல தடைகளை உருவாக்க முயல்வதாகத் தகவல் வெளியானது. அதேபோல கடந்த திங்கள்கிழமை மாலை அலிபுர்துவாரில் இருந்து சீல்டாவிற்கு செல்லும் சிறப்பு ரயிலில் ஏற விடாமல் எங்கள் ஆதரவாளர்கள் தடுக்கப்பட்டு, மாநில காவல்துறையினரால் லத்தி சார்ஜ் செய்யப்பட்டது. அதையும் மீறி அந்த ரயிலில் எங்கள் ஆர்வலர்கள் மற்றும் ஆதரவாளர்கள் புறப்பட்டுச் சென்றனர். காவல்துறை மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பைக் கடந்து, வடக்கு வங்காளத்திலிருந்து மூன்று ரயில்களும், தெற்கிலிருந்து நான்கு ரயில்களும் சீல்டா மற்றும் சந்த்ராகாச்சியை அடையும்” எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜாய் பிரகாஷ் மஜும்தார், “நாட்டை விட்டு தப்பியோடிய தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் பணத்தை பா.ஜ.க பறித்து, அந்த பணத்தைத் தனது நிகழ்ச்சிகளுக்குப் பயன்படுத்துகிறது. எனக்கு தெரிந்த வரையில், 2,000 கோடி ரூபாயை பா.ஜ.க 2021 சட்டமன்ற தேர்தலில் செலவழித்திருக்கிறது. ஒரு சிறிய கணக்கு…. இந்த பேரணியில் கலந்துகொள்ள 10,000 பேர் வருவதாக வைத்துக்கொள்வோம்.
அதில் ஒவ்வொரு ரயிலிலும் 11 பெட்டிகளும் 700-800 இருக்கைகளும் உள்ளன. அதாவது ஏழு ரயில்களில் 5,000-5,500 பேர் வரலாம். ஒவ்வொரு ரயிலிலும் ஏறும் ஒவ்வொருவருக்கும் பாஜக ரூ 3,000 முதல் 4,000 செலவழிக்காமல் வர முடியாது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? இந்த பணத்தை கொரோனா தொற்றுக்கு பிந்தைய சூழ்நிலையில் மக்களுக்கு நிதி உதவி செய்யப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இவ்வளவு பணம் செலவழித்து வருபவர்கள், மக்களின் கவனத்தைப் பெறப் பிரச்னையைத் தூண்ட முயற்சி செய்யலாம்” எனத் தெரிவித்திருக்கிறார்.