ஒன்றிய அரசை கண்டித்து முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து நூதன போராட்டம்

மதுரை : சாதிவாரி கணக்கெடுப்பு, பொருளாதார இடஒதுக்கீடு உத்தரவை ரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சமூகநீதி கூட்டமைப்பினர் மதுரையில் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நூதன போராட்டம் நடத்தினர்.ஒன்றிய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கவில்லை. புள்ளிவிவர சேகரிப்பு இல்லாமலும், எந்த ஒரு பரிந்துரையும் இல்லாமலும், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்காக அறிவிக்கப்பட்ட 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களின் கோரிக்கையை உடனடியாக ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சமூக நீதி கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு வீரசைவ பேரவை தலைவர் நாகரத்தினம் தலைமையில், சீர்மரபினர் நலச்சங்கத்தினர் நேற்று மதுரை கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

அலுவலக வளாகத்தில், வாழை இலையை விரித்து, பூசணிக்காயை வைத்தனர். அப்போது, பாதுகாப்பு போலீசார் இங்கு போராட்டம் நடத்த கூடாது. வளாகத்திற்கு வெளியே நடத்தும்படி கூறி, அழைத்து சென்றனர். பின்பு, ஒன்றிய அரசுக்கு எதிராக சமூக நீதி கூட்டமைப்பினர் கோஷங்கள் எழுப்பி, முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதாக கூறி நூதன போராட்டம் நடத்தினர். அதன்பின்பு, கோரிக்கை மனுவை, கூடுதல் கலெக்டர் சரவணனிடம் கொடுத்தனர். இதனை ஒன்றிய அரசின் கவனத்திற்கு அனுப்பி வைப்பதாக கூடுதல் கலெக்டர் அவர்களிடம் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.