சென்னை: பண வீக்கத்தைப் பற்றி கவலைப்படாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாமானிய மக்களிடமிருந்து விலகி நிற்கிறார் என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இந்தியா – அமெரிக்கா தொழில் கவுன்சிலின் உச்சி மாநாட்டில் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “பணவீக்கம் இந்தியாவின் முன்னுரிமை இல்லை. இது உங்களுக்கு ஆச்சரியம் அளிக்கலாம். கடந்த சில மாதங்களாக பண வீக்கத்தை நாங்கள் கட்டுப்படுத்தி வருகிறோம். பணவீக்கத்தைக் காட்டிலும் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகமாக உருவாக்கித் தருவதும், வருவாயை பகிர்வதும்தான் எங்கள் முன்னுரிமையாக உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இதனை சுட்டிக்காட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், “பணவீக்கம் என்னுடைய தலையாய கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார். அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது!
உணவுப் பொருள்களின் பணவீக்கம் 7.62% ஆக உயர்ந்திருக்கிறது! இப்பொழுது கூட நிதி அமைச்சர் பணவீக்கத்தைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றால் அவர் சாமானிய மக்களிடமிருந்து மிக விலகி நிற்கிறார் என்ற எண்ணம் உறுதிப்படுகிறது.” என தெரிவித்துள்ளார்.
பணவீக்கம் என்னுடைய தலையான கவலை அல்ல என்று சில நாட்களுக்கு முன் நிதி அமைச்சர் அறிவித்தார்
அவர் சொன்ன முகூர்த்தமோ என்னவோ, சில்லறைப் பணவீக்கம் 7% என்று உயர்ந்திருக்கிறது!
— P. Chidambaram (@PChidambaram_IN) September 13, 2022