வலங்கைமான் : அதிமுக ஆட்சியில் 10 ஆண்டாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கம் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைதொடர்ந்து வலங்கைமான் விவசாயிகள் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்துள்ளர்.டெல்டா மாவட்டங்களில் பெரிய அளவில் நெல் சாகுபடியை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல் சாகுபடிக்கு விதைத்த நாள் முதல் அறுவடைக்கு ஒரு வாரம் வரை தொடர்ச்சியாக தண்ணீர் தேவைப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தென்மேற்கு பருவமழை குறைவின் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து மிகவும் காலதாமதமாக டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு திறக்கப்பட்டது.
கால தாமதமாக திறக்கப்பட்ட மேட்டூர் அணை முன்கூட்டியே மூடப்பட்டது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் மூன்று போக சாகுபடி முடிவிற்கு வந்து ஒரு போக சம்பா சாகுபடியை மிகுந்த சிரமத்துடன் மேற்கொண்டனர். அக்கால கட்டங்களில் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை அடைந்து வந்தனர்.டெல்டா மாவட்டங்களில் சாகுபடி ஆற்றுப்பாசனத்தை நம்பி இல்லாமல் நிலத்தடி நீரை நம்பியே சாகுபடி மேற்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டது. அது போன்ற காலகட்டங்களில் மின் மோட்டார்கள் என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். டெல்டா மாவட்ட விவசாயிகள் மின்னிணைப்பு பெறுவதற்காக கடந்த 2003ம் ஆண்டில் இருந்து சுமார் 4.23 லட்சம் விவசாயிகள் முன்பே பதிவு செய்து பல ஆண்டுகளாக காத்துக்கிடக்கும் நிலைமை ஏற்பட்டது.
கடந்த அதிமுக ஆட்சியில் 2020ம் ஆண்டு 50 ஆயிரம் மின் இணைப்புகள் அறிவிக்கப்பட்டபோது பணக்காரர்கள்தான் பலனடையும் வகையில் 25 ஆயிரம் இணைப்புகளை தட்கல் திட்டத்திற்கே ஒதுக்கப்பட்டது. தட்கல் திட்டத்தில் பணம் கட்டும் அளவுக்கு விவசாயிகள் நல்ல நிலையில் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 லட்சம் மின் இணைப்புகள் தான் விவசாயிகளுக்கு தரப்பட்டன.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை அறிவித்து, தொடங்கி வைத்தார்.அதன்படி திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட தெற்கு பட்டம் வீராணம் கீழே விடைகள் கோவிந்தகுடி தொழுவூர் 44 ரெகுநாதபுரம் உள்ளிட்ட வருவாய் கிராமங்களை சேர்ந்த 46 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இப்பகுதியில் குறைந்த மின் அழுத்தத்தை தடுக்கும் விதமாக 16 கேவி திறன் கொண்ட மின்மாற்றி ஒன்று, 25 கேவி மின்திறன் கொண்ட மின்மாற்றி 5, 63 கேவி மின்திறன் கொண்ட மின்மாற்றி 15, 100k மின் திறன் கொண்ட மின்மாற்றி 1,250 கேவி மின் திறன் கொண்ட ஒரு மின்மாற்றி என 23 மின்மாற்றிகள் புதிதாக மின் வாரிய பொறியாளர் அகஸ்தியா மேற்பார்வையில் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகளை வழங்கியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து கூறிய விவசாய சங்க பிரதிநிதிகளில் ஒருவரான சுந்தர.விமல்நாதன் பேசும்போது, “தமிழ்நாடு அரசின் வரலாற்றில் முதன் முறையாக வேளாண்மைக்கான தனி நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டதற்காகவும், இயற்கை வேளாண் பெரியார் நம்மாழ்வார் பெயரில் சிறப்பு மையம் அமைத்திட அறிவிப்பு செய்ததற்காவும் தமிழக முதல்வரை முதலில் பாராட்டுகிறோம்.
தமிழகத்தில் உள்ள சுமார் 4.23 லட்சம் உழவர்கள் வேளாண்மைக்கு புதிய மின் இணைப்புகள் பெறுவதற்காக 2003ம் ஆண்டிலிருந்து முன்பதிவு செய்து காத்து கொண்டிருக்கும் நிலையில், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் எவரும் முன் எப்போதும் அறிவித்திடாத, ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்கும் திட்டத்தை சட்டமன்றத்தில் அறிவித்த கையோடு உடனடியாக அரசாணை வெளியிட்டு அந்த திட்டத்தையும் தொடங்கி வைத்துள்ளது மிகவும் வரவேற்புக்குரியது என கூறினார்.