`நாங்க கோயிலுக்குள்ள போகக்கூடதா?’-40 ஆண்டுகளுக்கு பின்உரிமையை மீட்டெடுத்த பட்டியலின மக்கள்

தலைவாசல் அருகே 40 ஆண்டுகளுக்கு பின்பு தங்களுக்கான வழிபாட்டு உரிமையை பெற்று பட்டியிலின மக்கள் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர்.
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வடகுமரை கிராமத்தில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் காளகஸ்தீஷ்வரர் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில்கள் உள்ளது. இந்நிலையில், கடந்த 1974 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் இக்கோவில் செயல்பட்டு வந்தாலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின பொதுமக்கள் கோவில் வளாகத்துக்குள் நுழைந்து சாமி தரிசனம் செய்ய தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.
இதனால் வடகுமரை கிராமத்தைச் சேர்ந்த பட்டியல் இன சமூதத்தினர் திருமணம் உள்ளிட்ட விசேஷ வைபவங்களுக்கு ஆறகளூர், தேவியாக்குறிச்சி, தென்பொன்பரப்பி, ஆத்தூர் உள்ளிட்ட பிற ஊர்களில் உள்ள கோயில்களுக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது. கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மறுக்கப்பட்டு வந்த வழிபாட்டு உரிமையை உடனடியாக தங்களுக்கு வழங்க வேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த பட்டியலின மக்கள் கடந்த டிசம்பரில் கோவில் நுழைவு போராட்டம் அறிவித்தனர்.
image
இதையடுத்து மற்றொரு தரப்பினர் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் செல்ல எதிர்ப்பு தெரிவித்தது தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். இது ஒருபுறம் இருக்க கோவில் நிலங்கள் தங்களுக்குத்தான் சொந்தம் என தனிநபர் (கந்தசாமி) என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என உத்தரவிட்டது. இதனால் பட்டியிலின மக்கள் கோவிலுக்குச் செல்ல முடியாத சூழல் நிலவியது.
இதைத் தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆலய நுழைவு போராட்டத்தை அறிவித்தார். இதையடுத்து அரசு தரப்பில் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை சுட்டிகாட்டியதால் ஆலய நுழைவு போராட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு தொடர்பாக இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபடலாம் என்ற உத்தரவை பிறப்பித்தது. மேலும் கோவில் நிலங்கள் நிர்வாகம் ஆபரணங்கள் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளையும் வடசென்னிமலை பாலசுப்பிரமணியர் திருக்கோவில் தக்கரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டது.
image
இதையடுத்து வருவாய் கோட்டாட்சியர் சரண்யா முன்னிலையில் தங்களது வழிபாட்டு உரிமையை பெற்று பட்டியலின மக்கள் காளகதீஷ்வரர் மற்றும் வரதராஜபெருமாள் கோவில்களுக்குச் சென்று வழிபட்டனர். அப்பகுதியில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.