2022ம் ஆண்டிற்கான 47வது டொராண்டோ சர்வதேச திரைப்பட விழா கனடாவில் செப்டம்பர் 8ம் தேதி தொடங்கியது. இந்த மாதம் 18ம் தேதி வரை இந்த விழா நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் ராஜமௌலி `விஷனரிஸ்’ என்ற பிரிவில் தெலுங்கு சினிமா குறித்தும் கலை, வணிகம் மற்றும் `Pushing the limits of industrialized pop cinema’ (நிறுவனமாக்கப்பட்ட வணிக சினிமாக்களை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லுதல்) என்ற தலைப்பிலும் கலந்துரையாடியிருந்தார்.
அப்போது தனது அடுத்த படம் தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுவுடன் உருவாக இருப்பதாகவும் இப்படம் ‘ஜேம்ஸ் பாண்ட்’ அல்லது ‘இந்தியானா ஜோன்ஸ்’ படங்களைப் போன்ற ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
இது பற்றிக் கூறிய அவர், “எனது அடுத்த படம் மகேஷ் பாபுவுடன். இது உலகையே சுற்றி வரும் ஆக்ஷன் அட்வென்ச்சர் படமாக இருக்கும். இது ஒரு வகையான ஜேம்ஸ் பாண்ட் அல்லது இந்தியானா ஜோன்ஸ் படங்களைப் போன்று இருக்கும். ஆனால் இந்தியக் கதைக் களத்தை அடிப்படையாகக் கொண்டு அதற்கேற்ற வகையில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.
இதனிடையே தற்போது மகேஷ் பாபுவின் 28வது (SSMB28) படத்தை இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கவுள்ளார். இப்படத்தில் பூஜா ஹெக்டே, சம்யுக்தா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். `சர்காரு வாரி பாட்டா’ படத்துக்குப் பிறகு இசையமைப்பாளர் தமன் மகேஷ் பாபு படத்துக்கு மீண்டும் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.