பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது மகன் இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளார். ராணி அணிந்திருந்த கிரீடம், மன்னர் சார்லஸின் மனைவி கமிலாவுக்கு செல்லவுள்ளது. இந்த கிரீடத்தை அலங்கரிக்கும் 105 கேரட் கோஹினூர் வைரம் இந்தியாவில் இருந்து கொண்டு செல்லப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
கோஹினூர் வைரம் ஜெகன்நாதர் கோயிலுக்கு மகாராஜா ரஞ்சித் சிங் நன்கொடையாக வழங்கியது எனவும், அதனை மீண்டும் இந்தியாவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு, ஜெகன்நாத சேனா என்ற அமைப்பு குடியரசுத் தலைவர் திரௌபதியிடம் முறையிட்டுள்ளது.
பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தான் மன்னர் நாதிர் ஷாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பிறகு புரி ஜெகன்நாதருக்கு காணிக்கையாக அளித்ததாக ஜெகன்நாத சேனா அமைப்பைச் சேர்ந்த பிரியதர்சன் பட்நாயக் கூறியுள்ளார். இது தொடர்பாக அக்டோபர் 19, 2016 அன்று பிரிட்டன்ராணிக்கு கடிதம் அனுப்பியதாகவும், இது தொடர்பாக பிரிட்டன் அரசிடம் முறையிடுமாறு பக்கிங்ஹாம் அரண்மனையிலிருந்து அக்கடிதத்திற்கு பதிலளிக்கப்பட்டதாகவும் ப்ரியதர்சன் பட்நாயக் தெரிவித்துள்ளார்.
ஆறு ஆண்டுகளாக இந்த விவகாரத்தில் ஏன் அமைதியாக இருந்தீர்கள் எனக் கேட்டதற்கு பதிலளித்த பிரியதர்சன் பட்நாயக், தங்களுக்கு விசா மறுக்கப்பட்டதால், பிரிட்டன் அரசுடன் இந்த விஷயத்தை மேற்கொண்டு விவாதிக்க முடியவில்லை என்று கூறினார்.
இந்தியா திரும்புமா கோஹினூர் வைரம் ?
கோஹினூர் வைரத்தை இந்தியா கொண்டு வர வேண்டுமென கோரிக்கை எழுவது இது முதல்முறையல்ல. ஒடிசாவின் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் பூபிந்தர் சிங், கோஹினூர் வைரத்தை திரும்பக் கொண்டுவருவது குறித்த பிரச்சினையை 2016-ம் ஆண்டு ராஜ்யசபாவில் எழுப்பினார்.
எழுத்தாளரும் வரலாற்றாசிரியருமான வில்லியம் டால்ரிம்பிள் தனது “கோஹினூர்” புத்தகத்தில், ரஞ்சித் சிங்கின் மகன் துலீப் சிங் விக்டோரியா மகாராணியிடம் கோஹினூர் வைரத்தை ஒப்படைத்ததற்காக வருத்தம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக தனது கருத்தைத் தெரிவித்துள்ள மத்திய அரசு, கோஹினூர் வைரம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் திருடவோ, வற்புறுத்தியோ எடுக்கப்படவில்லை எனவும், பஞ்சாப் ஆட்சியாளர்கள் கோஹினூர் வைரத்தை கிழக்கிந்திய கம்பெனிக்கு வழங்கியதாகவும் கூறியுள்ளது. கோஹினூர் வைரம் தற்போதைய ஆந்திர மாநிலம் கொல்லூரில் அமைந்துள்ள வைரச்சுரங்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். இந்திய மதிப்பில் அதன் மதிப்பு சுமார் ரூ.1, 582 கோடி ஆகும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ