“எதிர்பார்ப்போடு வந்தோம் ஏமாற்றமே மிஞ்சியது" – ஜாக்டோ ஜியோ சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்

சென்னை தீவுத்திடலில் கடந்த 10-ம் தேதி ஜாக்டோ-ஜியோ `வாழ்வாதார நம்பிக்கை மாநாடு’ நடைபெற்றது. இந்த மாநாட்டில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர் எனக் கூறப்பட்டது. குறிப்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் கன்னியாகுமரி, மதுரை, கோவை, சென்னை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் மாநாட்டுக்கு வருகை தந்தனர்.

மு.க. ஸ்டாலின்

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “கடந்த ஆட்சியின் போது பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தியதற்காகப் பல வழிகளில் பழிவாங்கப்பட்டீர்கள். திமுக அரசு அமைந்ததும் அதை முற்றிலுமாக ரத்து செய்தோம். கொரோனா காலத்தில் கடும் நிதிநெருக்கடி இருந்ததாலும் மற்ற மாநிலங்களைப்போல் இல்லாமல் தமிழ்நாட்டின் அரசு ஊழியர்களுக்குத் தாமதமின்றி முழுமையாக ஊழியம் வழங்கப்பட்டது.

அகவிலைப்படி 17%-த்தில் இருந்து 31%-ஆக உயர்த்தியுள்ளோம். அகவிலைப்படி வழங்க மாநில அரசுக்கு இந்த நிதியாண்டு சுமார் 12 ஆயிரம் கோடி கூடுதலாக செலவு ஏற்பட்டது. 10,338 புதிய பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது. புதிய அரசு வந்து 15 மாதங்கள் தான் ஆகியிருக்கிறது. 10 வருடங்கள் பட்ட கஷ்டத்தை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றார்.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அரசு கொண்டுவந்த திட்டங்கள் குறித்துப் பேசிய முதல்வர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது குறித்து எதுவும் பேசாதது மாநாட்டிற்கு வந்தவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது. இந்தச்சூழலில், பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்திக் கடந்த 11-ஆம் தேதி சேலம், தாராபுரம், பெரம்பலூர் பகுதிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தை நடத்தியுள்ளது.

பென்ஷன்

அப்போது, “ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டது போல தமிழகத்திலும் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்” என்று முழக்கமிட்டனர்.

இதற்கு முன்னதாக மாநாட்டிற்கு முதல்வர் தலைமை ஏற்பதாக இருந்ததால், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ நடத்த இருந்த போராட்டமும் ஒத்திவைக்கப்பட்டது. மாநாட்டில் முதல்வரின் பேச்சு ஏமாற்றத்தை அளித்ததால் ஜாக்டோ-ஜியோ மீண்டும் போராட்ட அறிவிப்பை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

சாந்தகுமார்

இதுகுறித்து, ஜாக்டோ ஜியோ சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரிடம் பேசினோம், “எதிர்பார்ப்புகளோடு தான் 2 லட்சம் பேர் மாநாட்டில் கலந்துகொண்டார்கள். ஆனால், ஏமாற்றத்தோடு தான் மாநாடு முடிந்தது. படிப்படியாக நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கூறியுள்ளார். எங்களின் முக்கிய கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து முதல்வர் எதுவும் பேசாதது வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் நாங்கள் போராட்டம் நடத்திய போது முதல்வர் கலந்துகொண்டார். அப்போது, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அவர் வாக்குறுதி அளித்தார். அவர் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், ஏதோ ஒரு அழுத்தம் காரணமாக அவர் இதுபற்றி பேச வில்லை என்று நினைக்கிறோம். எந்த அறிவிப்பும் இல்லை என்று முன்னரே சொல்லியிருந்தால் மாநாட்டைத் தள்ளிவைத்திருக்கலாம். இருந்தாலும் முதல்வர் மேல் எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. கூடிய விரைவில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.