தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதி கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் செப் 16ம் தேதியில் இருந்து செப் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
மல்டிபிளக்ஸ் அசோசியேஷன் ஆஃப் இந்தியா என்ற அமைப்பு செப்டம்பர் 16ம் தேதியை தேசிய சினிமா தினம் என அறிவித்திருந்தது. அந்த நாளில் PVR, INOX, CINEPOLIS, CARNIVAL, MIRAJ, CITYPRIDE, ASIAN, MUKTA A2, MOVIE TIME, WAVE மற்றும் M2K போன்ற குழுமங்களுக்கு சொந்தமான சுமார் 4000 மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் விலை 75 ரூபாய்க்கு விற்கப்படும் என கூறியிருந்தனர். 75ஆவது சினிமா தினத்தைக் கொண்டாடும் வகையில் வெளியாகியிருந்த இந்த அறிவிப்பை ரசிகர்களும் வரவேற்றனர். இருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பலரும் இந்த விலையில் டிக்கெட் விற்கப்பட்டால் அது வசூலை பாதிக்கும் எனக் கூறினார்கள்.
ஆனாலும் அந்த அறிவிப்பின் காரணமாக செப் 16ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் புதிய திரைப்படங்கள் பலவும் வெளியாகின்றன. குறிப்பாக சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’, அருண் விஜயின் ‘சினம்’ உள்ளிட்ட புதிய படங்கள் வெளியாக உள்ளன. மேலும் கடந்த வாரம் ரன்பீர் கபூர் நடிப்பில் வெளியான ‘பிரம்மாஸ்திரா’ இந்திப் படமும் வட இந்தியாவில் நல்ல வசூலைப் பெற்று வருகிறது.
இந்நிலையில் வசூல் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் சம்பந்தப்பட்ட திரைப்படங்களின் விநியோகஸ்தர்கள் மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா அறிவித்த தேசிய சினிமா தின முடிவை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தேசிய சினிமா தினம் செப்டம்பர் 16ஆம் தேதியிலிருந்து 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் புதிதாக வெளியாகும் படங்கள் ஒரு வாரத்தைக் கடந்திருக்கும்.
மேலும் பொன்னியின் செல்வன் போன்ற படங்கள் இந்த மாத இறுதியில்தான் வெளியாகின்றது. செப் 23ஆம் தேதியில் தேசிய சினிமா தினம் கொண்டாடப்பட்டால் விநியோகஸ்தர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இருக்கும் என்று இந்த புதிய முடிவை அறிவித்துள்ளனர்.
கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படுவதால் பார்வையாளர்களுக்கு நன்றி சொல்லும் விதமாக, இந்த தேசிய சினிமா தினத்தை மல்டிபிளக்ஸ் அசோசியேசன் ஆஃப் இந்தியா அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜான்சன்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM