சென்னையில் கொடூரம்; நாயை கட்டையால் அடித்து கொலை செய்த மனித மிருகம்!

சென்னை பெரம்பூர் ஹைதர்கார்டன் மெயின் தெருவை சேர்ந்தவர் 32 வயதுடைய கார்த்திக். இவர் அவருடைய வயதான பெற்றோர்களுடன் சொந்த வீட்டில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கார்த்திக் அவர் வேலை செய்யும் இடத்தில் இருந்து 2 அறை மாத குட்டியாக இருந்த நாய் ஒன்றை வீட்டுக்கு எடுத்து வந்துள்ளார். மேலும் அந்த குட்டி நாய் கருப்பு நிறத்தில் இருந்ததால் பிளாக்கி என்று அழகாக பெயர் வைத்து அவரின் குடும்பத்தின் ஒரு நபராக வளர்த்து வந்துள்ளார். கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர்கள்  பாசமாக வளர்த்து வந்த நாயை விட்டு சிறிது நேரம் கூட பிரிந்து இருக்க மாட்டார்கள் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி காலை 11 மணியளவில் முழு போதையில் கார்த்திக் வீட்டிற்கு வந்த கார்த்திக்கின் தங்கை கணவர் சிலம்பரசன், நாய் பிளாக்கியைப் அங்கிருந்த மரத்தில் கட்டிப் போட்டு விட்டு உருட்டு கட்டையால் சரமாரியாக அடித்துள்ளார். அப்போது நாயின் அலறல் சத்தம் கேட்டு வீட்டினில் இருந்து வெளியே வந்த கார்த்திக் மற்றும் அவரது பெற்றோர்கள் பார்த்த போது அந்த நாய் பரிதாபமாக இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்து அதிர்ந்து போன அவரது குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் குடிகாரன் சிலம்பரசனை அடித்துள்ளனர்.

மேலும் இந்தக் கொடூர சம்பவம் தொடர்பாக ஓட்டேரி காவல் நிலையத்தில் கார்த்திக் மற்றும் (HOPE FOR CRITTERS) என்ற தன்னார்வ  விலங்கு நல அமைப்பு (animal welfare organisation) சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வழக்கு பதிவு செய்த ஓட்டேரி போலீசார் விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், நாயை அத்துமீறி அடித்தல், துன்புறுத்தல் மற்றும் கொலை செய்யும் நோக்கத்தில் அடித்தல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிலம்பரசனை அதிரடியாக கைது செய்தனர்.

சென்னையில் ஐந்தறிவு கொண்ட நாயை ஆறறிவு கொண்ட மனித மிருகம் கட்டையால் அடித்து கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் விலங்குகளுக்கு எதிரான சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட்டால், இதுபோன்ற கொடூர சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.