தமிழக அரசின் கடனை அடைக்க சவுதியில் இருந்து ரூ90,000 அனுப்பிய திருச்சி இன்ஜினியர்

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் கெப்பம்பட்டி கிழக்கு காலனியை சேர்ந்தவர் சின்னராஜா செல்லதுரை. இவர் சவுதி அரேபியா உள்ள ஜிந்தாவில் வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவுக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், நான் தற்போது சவுதி அரேபியாவில் இன்ஜினியராக வேலை பார்க்கிறேன். பொருளாதாரம் படித்துள்ளேன்.

2022- 23ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் அறிக்கையை கடந்த மார்ச் மாதம் தொலைக்காட்சி வழியாக அறிந்தேன். அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதி நிலவரப்படி தமிழக அரசின் கடன் ரூ.6 லட்சத்து 53 ஆயிரத்து 348.73 கோடியாக இருக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2012ல் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 47,030 ஆகும். இதன்படி கணக்கிட்டால் ஒவ்வொரு தமிழன் மீதும் உள்ள தமிழக அரசின் கடன் ரூ.90,558 ஆக உள்ளது.

இதையறிந்து நான் மிகுந்த மனவேதனை அடைந்தேன். எனவே தமிழக அரசின் கடனை அடைக்கும் வகையில் எனது பங்களிப்பை செலுத்த வேண்டுமென முடிவு செய்து கடந்த 6 மாதங்களாக சேமித்த பணம் ரூ.90,558யை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அனுப்புகிறேன். தமிழக அரசின் கடனை செலுத்துவதற்கு எனது பங்களிப்பை நீங்கள் பயன்படுத்த வேண்டும். தமிழ்நாடு ஒரு குடும்பம். அந்த குடும்பத்தில் நான் பிறந்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தமிழக அரசின் கடன் சுமையை குறைக்க ஒவ்வொரு தமிழரும் தனது பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த தொகையை பெற்று கொண்ட தமிழக அரசு அதற்கான ரசீதை அனுப்பி வைத்துள்ளது. இதுதொடர்பாக சின்னராஜா செல்லதுரைக்கு தமிழக நிதித்துறை இணைச் செயலாளர் கடிதம் எழுதியுள்ளார். அதில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்காக நீங்கள் அனுப்பி வைத்த மதிப்புமிக்க உங்கள் பங்களிப்புக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.