புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் கணவன் விரும்பினார் என்பதற்காக அவரது மனைவியே உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்று வருகிறது.
2018ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு, எல்ஜிபிடிக்யூ+ மீதான பொதுப் பார்வை மாறியுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் இதுகுறித்த விவாதம் தொடர் பேசுபொருளாக மாறியுள்ளது. இதன் நேர்மறை விளைவுகள் சமூக, குடும்ப அமைப்புகள் மற்றும் சட்ட ரீதியாகவும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன.
தன்பாலின ஈர்ப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பொதுவெளியில் பேசத் தொடங்கியிருப்பதே நல்ல தொடக்கமாகத்தான் தற்காலித்தில் பார்க்கப்படுகிறது. சமூகத்தில் தாங்களும் மனிதர்கள் தான் தாங்கள் எங்கள் விருப்பப்படி வாழ உரிமையுண்டு என அவர்களே பொதுவெளிகளில் தங்கள் உரிமைக்காக பேச தொடங்கியிருப்பதும் காலத்தின் கட்டாயம்.
எல்ஜிபிடிக்யூ
இந்நிலையில் தான் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் ஒரு சம்பவம் ஒடிசா மாநிலத்தில் நடந்துள்ளது. சமூக வலைதளங்கள் பாராட்டுகளையும் அதே நேரத்தில் விவாதத்தையும் ஒரு சேர கிளப்பியிருக்கிறது. கணவன் விரும்பினார் என்பதற்காக அவரது மனைவியே உறவினர்கள் முன்னிலையில் கணவருக்கு திருநங்கையை திருமணம் செய்து வைத்த சம்பவம் சமூக வலைதளங்களில் பாராட்டுதலை பெற்று வருகிறது.

அரிய சம்பவம்
ஒடிசா மாநிலத்தில் காலஹந்தி மாவட்டத்தை சேர்ந்த பகீர் என்பவருக்கு திருமணம் ஆகி இரு குழந்தைகள் உள்ளது. கூலித் தொழிலாளியான அவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சங்கீதா என்ற திருநங்கையுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவரும் காதலிக்க தொடங்கி இருக்கின்றனர் ஆனால் பகீர் தனது காதலை வெளியே சொல்லாமல் ரகசியமாகவே தொடர்ந்து வந்திருக்கிறார். இந்த நிலையில் பகிர் திருநங்கை ஒருவருடன் பழகுவதை அவரது மனைவி கண்டுபிடித்து கேட்டுள்ளார்.

திருநங்கையுடன் திருமணம்
இதை அடுத்து தான் சங்கீதாவுடன் பழகி வருவது குறித்து மனைவியிடம் வெளிப்படையாக பேசியுள்ளார் பகிர். மேலும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாகவும் கூறி இருக்கிறார். ஆனால் அவரே எதிர்பாராத விதமாக தனது கணவரின் காதலை ஏற்றுக் கொள்வதாகவும் தானே திருமணம் செய்து வைப்பதாகவும் கூறி இருக்கிறார் அவரது மனைவி. இதை அடுத்து அப்பகுதியில் உள்ள திருநங்கைகள் உறவினர்கள் புடை சூழ அங்குள்ள கோவிலில் பகீர் சங்கீதா திருமணம் நடைபெற்றது.

கவலையில்லை
அப்பகுதியைச் சேர்ந்த பலரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய நிலையில் தற்போது தனது மனைவியுடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் சிலர் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது என்ற சட்டத்தை மீறி திருமணம் நடைபெற்றுள்ளதாகவும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் அதைப் பற்றி எல்லாம் தங்களுக்கு கவலை இல்லை நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியுடன் வசிக்கிறோம் என கூறுகிறார் பகீர்.