இபிஎஸ் தரப்பினர் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியிருக்கும்: வா. புகழேந்தி

அதிமுக தலைமை அலுவலக கலவர வழக்கில் அனைத்து உண்மைகளும் விரைவில் வெளியே வரும் என்றும் தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டியிருக்கும் என்றும் வா. புகழேந்தி கூறியுள்ளார். ஜூலை பதினொன்றாம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற பொழுது ஓ பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வந்த பொழுது கலவரம் ஏற்பட்டது. இதில் ஓபிஎஸ் தரப்பினர் கடுமையாக தாக்கப்பட்டதாக கூறி இதற்கு காரணமான ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் துணை ஒருங்கிணைப்பாளர் ஜேசிடி பிரபாகரன் புகார் அளித்தார். 

இது குறித்து எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ளாத நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது ஓபிஎஸ் தரப்பினர் தாக்கப்பட்டது குறித்து ஏன் விசாரிக்கவில்லை என நீதிபதி இளந்திரையன் கேள்வி எழுப்பியதுடன் இதுகுறித்து விளக்கம் அளிக்க அரசு தரப்புக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளார்.

இது குறித்து புகழேந்தி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் குறிப்பாக 11 ஆம் தேதிக்கு முன்பே சுமார் 500 பேர் தலைமை அலுவலகதில் குவிக்கப்பட்டு ஏழு மாவட்ட செயலாளர்கள் தலைமையில் ரவுடிகள் அங்கே தங்கி திட்டமிட்டு ஓபிஎஸ் அலுவலகம் வரும்பொழுது அவரது ஆதரவாளர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். 

எப்படி ஏழு மாவட்ட செயலாளர்கள் பொதுக் குழு கூட்டத்திலும் கலந்து கொண்டதாகவும் கூறப்படும் நிலையில் தலைமை அலுவலகத்தின் அருகே இருந்து கொண்டு ரவுடிகளுக்கும் தோள் கொடுத்து கலவரத்தை தூண்டியுள்ளனர் என்ற உண்மை வெளியில் வரும்.

இந்த கலவரத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம். அவரால் ஏவப்பட்டவர்கள் தான் ஏழு மாவட்ட செயலாளர் தலைமையில் தாக்கிய ரவுடிகள் என்பது உண்மை. இது குறித்த விசாரணை தற்போது தொடர்ந்து நடைபெறும் உண்மைகள் எல்லாம் வெளியில் விரைவில் வரும். தொடர்ந்து இபிஎஸ் தரப்பினர் இது போன்ற குற்றவியல் நீதிமன்றங்களுக்கு அலைய வேண்டிய சூழல் உருவாகியுள்ளது’ என அவர் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.