மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் கடவுள் பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானது என ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளது.
பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத் (96) வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 8ஆம் தேதி காலமானார். ஸ்கார்ட்லாந்தில் உள்ள பால்மாரல் அரண்மனையில் அவர் உயிர் பிரிந்ததாக, பக்கிங்ஹம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ராணி எலிசபெத்தின் உடல் வருகிற 19ஆம் தேதி நல்லடக்கம் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணி எலிசபெத் மறைவையடுத்து, அவரது மூத்த மகன் சார்லஸ் பிரிட்டனின் மன்னராக முடிசூடிக் கொண்டுள்ளார். அவர் மூன்றாம் சார்லஸ் என அழைக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து ராணியின் மகுடத்தை அலங்கரித்த கோஹினூர் வைர கிரீடம் மன்னர் சார்லஸின் மனைவி கமீலாவிடம் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இங்கிலாந்து ராணி எலிசபெத் ரகசிய கடிதம்: 2085ஆம் ஆண்டுதான் பிரிக்க முடியும்!
இந்த நிலையில், அந்த கிரீடத்தை அலங்கரிக்கும் கோஹினூர் வைரம் கடவுள் பூரி ஜெகன்நாதருக்கு சொந்தமானது என ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஜெகன்னாத் சேனா என்ற அமைப்பு உரிமை கோரியுள்ளது. இதுகுறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அந்த அமைப்பு எழுதியுள்ள கடிதத்தில், “கோஹினூர் வைரம் ஸ்ரீ ஜெகநாத பகவானுக்கு சொந்தமானது. அது இப்போது இங்கிலாந்து ராணியிடம் உள்ளது. மகாராஜா ரஞ்சித் சிங் தனது விருப்பப்படி ஜகன்னாத கடவுளுக்கு அதை நன்கொடையாக வழங்கியது. கடவுள் ஜெகநாதருக்காக இதை இந்தியாவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்குமாறு பிரதமரை கேட்டுக் கொள்ள வேண்டும்.” என்று கூறப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜெகன்னாத் சேனாவின் அமைப்பாளர் ப்ரிய தர்சன் பட்நாயக் கூறுகையில், பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங், ஆப்கானிஸ்தானை சேர்ந்த நாதிர் ஷாவை போரில் தோற்கடித்தார். அதன் நினைவாக, பஞ்சாப் மகாராஜா ரஞ்சித் சிங் கோஹினூர் வைரத்தை பூரி ஜெகநாதருக்கு நன்கொடையாக அளித்தார். ஆனால், அந்த வைரம் உடனடியாக ஒப்படைக்கப்படவில்லை. 1849 இல் மகாராஜாவின் மகன் துலீப் சிங்கிடம் இருந்து கோஹினூர் வைரத்தை ஆங்கிலேயர்கள் எடுத்துக் கொண்டனர் என தெரிவித்துள்ளார்.
கோஹினூர் வைரத்தை ஒப்படைக்கும்படி, 2016ஆம் ஆண்டில் பக்கிங்ஹம் அரண்மனைக்கு ப்ரிய தர்சன் பட்நாயக் கடிதம் எழுதியுள்ளார். ஆனால், பிரிட்டன் அரசை நாடுமாறு அரண்மனையில் இருந்து அவருக்கு கடிதம் வந்துள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவருக்கு அந்த வைரம் தொடர்பாக புதிய கடிதம் ஒன்றை அவர் எழுதியுள்ளார். அந்த கடிதத்தின் நகல் ஒன்று இங்கிலாந்தில் உள்ள பக்கிங்ஹம் அரண்மனைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஆறு ஆண்டுகள் வைரம் தொடர்பாக பேசாமல் அமைதியாக இருந்தது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அவர், இங்கிலாந்து செல்ல தனக்கு விசா கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து ராணியின் கிரீடம் மிகவும் பிரபலம். இந்த கிரீடத்தில் விலைமதிப்பற்ற 2, 800 வைரக் கற்கள் உள்ளன. இந்த கிரீடத்தின் மையத்தில் 21 கிராம் எடை கொண்ட 105 கேரட் கோஹினூர் வைரம் பொருத்தப்பட்டுள்ளது. உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரங்களுள் ஒன்று கோஹினூர் வைரம். இது இந்தியாவிற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. ஆனால், வேறு சில நாடுகளும் வைரத்துக்கு சொந்தம் கொண்டாடி வருகின்றன. . இந்தியாவும் பல முறை இந்த வைர கிரீடத்துக்கு உரிமை கோரி, பிரிட்டன் அரசுக்கு கடிதம் எழுதி இருக்கிறது. ஆனால், இதுவரை எந்த பதிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.