கான்பெரா: ஆஸ்திரேலியாவில் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட கங்காருவால், அதன் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரின் ரெட்மவுண்ட் பகுதியை சேர்ந்தவர் பீட்டர் எடஸ் . இவர் தனது வீட்டில் 3 வயது நிரம்பிய கங்காருவை செல்லப் பிராணியாக வளர்த்து வந்தார்.
இந்தச் சூழலில், தான் வளர்த்து வந்த கங்காருவால் பீட்டர் தனது இல்லத்தில் கடுமையாக தாக்கப்பட்டு, உயிருக்கு ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டார். இதனைக் கண்ட அக்கப்பக்கத்தினர் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஆம்புலன்ஸில் வந்த மருத்துவக் குழு பீட்டருக்கு உடனடி சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பீட்டர் உயிரிழந்தார்.
இதன்பின் நடத்தப்பட்ட விசாரணயில்தான், காட்டு விலங்கான காங்காருவை பீட்டர் தனது இல்லத்தில் செல்லப் பிராணியாக வளர்த்து வந்தது தெரிய வந்தது. மேலும், பீட்டரை தாக்கிக் கொன்ற கங்காரு அங்கு வந்திருந்த மருத்துவர்களை தாக்க முயன்றதால், அதை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
இதற்கு முன்னதாக ஆஸ்திரேலியாவில் 1936-ஆம் ஆண்டு காங்காருவால் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்தார். இந்த நிலையில், 86 ஆண்டுகளுக்குப் பிறகு கங்காரு தாக்கி ஒருவர் உயிரிழந்திருக்கிறார்.