அகமதாபாத்: கனவுகளில் பிஸினஸ் செய்பவர்கள் ஒரு போதும் ஜெயிக்க மாட்டாங்க என்றும் குஜராத்தில் இந்த முறையும் பாஜக தான் வெற்றி பெறும் என்றும் அமித்ஷா கூறியுள்ளார். அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலளித்து பேசியுள்ளார்.
பஞ்சாபில் ஆட்சி அமைத்த உற்சாகத்துடன் இருக்கும் ஆம் ஆத்மி கட்சி அதே வேகத்தில் குஜராத்தில் ஆட்சி அமைக்க திட்டம் தீட்டி வருகிறது.
இதற்காக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் இப்போதே பணிகளை தொடங்கியுள்ளார் .
குஜராத் தேர்தல்
கடந்த 2017 ஆம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியிட்டாலும் அக்கட்சிக்கு படு தோல்வியே மிஞ்சியது. எனினும் இந்த முறை பஞ்சாபில் ஆட்சி அமைத்து இருப்பதால் ஆம் ஆத்மி கட்சிக்கு கூடுதல் நம்பிக்கை கிடைத்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு சில மாதங்களே எஞ்சியிருப்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் அடிக்கடி குஜராத் சென்று தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

அமித்ஷா தாக்கு
குஜராத்தில் தனது பிரசாரத்தின் போது, இலவச மின்சாரம், தரமான இலவச கல்வி, மருத்துவம் போன்ற வாக்குறுதிகளை பிரதானமாக வைத்து கெஜ்ரிவால் வாக்குறுதிகளை அளித்து வருகிறார். இதனால், தேர்தல் களம் அனல்பறக்க தொடங்கியுள்ளது. இதேபோல் ஆம் ஆத்மியை பாஜகவும் கடுமையாக விமர்சிக்க தொடங்கியிருக்கிறது. இந்த நிலையில், இன்று உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா, கெஜ்ரிவாலை கடுமையாக சாடினர்.

பாஜக வெற்றி உறுதி
குஜராத்தின் காந்திநகரில் சில வளர்ச்சி திட்டங்களை காணொலி வாயிலாக தொடங்கி வைத்த அமித்ஷா அந்த நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அமித்ஷா கூறுகையில், ”குஜராத்தில் பாஜக ஆட்சியை தக்க வைப்பது மட்டும் அல்லாமல் தனிப்பெரும்பான்மையுடன் அமோக வெற்றியை பெறும். குஜராத் மக்களை பற்றி நான் நன்கு அறிவேன். செய்த பணிகளை வைத்தே குஜராத் மக்கள் யாரையும் அங்கீகரிப்பார்கள். உண்மையில் பணியாற்றுபவர்கள் பாஜகவில் தான் உள்ளனர். கனவு வியாபாரம் செய்பவர்களால் குஜராத்தில் வெற்றி பெற முடியாது. எங்களின் வெற்றி உறுதியான முடிவு” என்றார்.

கெஜ்ரிவால் பதிலடி
இந்த நிலையில், அகமதாபாத்தில் இது குறித்து செய்தியாளர்கள் கெஜ்ரிவாலிடம் கேள்வி எழுப்பினர். இக்கேள்விக்கு பதிலளித்த கெஜ்ரிவால், ”அமித்ஷா சரியாகத்தான் சொல்லியிருக்கிறார். கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் வரவு வைப்பதாக கூறியவர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம். பொய்யான கனவுகளை (வாக்குறுதிகள்) விற்பவர்களை ஒருபோதும் நம்ப வேண்டாம் என்று சொல்வதை நான் முழுமையாக வரவேற்கிறேன். அதற்கு பதிலாக டெல்லி மற்றும் பஞ்சாபில் இலவச மின்சாரம் அளித்துவிட்டு குஜராத்தில் இந்த திட்டத்தை அறிவிக்க போகிறவர்களையும் நம்புங்கள்” என்றார்.