பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள நகராட்சி மாட்டு சந்தை, வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் நடைபெறும். கடந்த மாதம் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகள் வரத்து ஓரளவு இருந்தது. 2500 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. அப்போது கேரள மாநிலத்தில் இருந்து வியாபாரிகள் வருகையும் அதிகளவில் இருந்ததால் மாடுகள் கூடுதல் விலைக்கு விற்பனையானது. அதன் பின்னர் கடந்த 2 வாரமாக மாடுகள் வரத்து ஓரளவுதான் இருந்தது. பல மாடுகள் விற்பனையாகாமல் சந்தையிலேயே தேக்கமானது.
இந்நிலையில் ஓணம் பண்டிகை நிறைவு அடைந்ததால் 2 வாரத்துக்கு பிறகு இன்று, மாட்டு சந்தைக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மாடுகள் வரத்து அதிகளவு இருந்ததுடன், அதனை வாங்கி செல்ல கேரள வியாபாரிகளின் வருகையும் அதிகளவில் இருந்தது. கடந்த இரண்டு வாரமாக ரூ.1 கோடி முதல் ரூ.1.20 கோடி வரை இருந்த வர்த்தகம் இன்று அதிகபட்சமாக ரூ.1.70 கோடி வரை மாடுகள் விற்பனையானது என வியாபாரிகள் தெரிவித்தனர்.