திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில், ஊழல் செய்ததாக ஆளுங்கட்சிக்கு எதிராக, மாநில தலைமைச் செயலகம் நோக்கி எதிர்க்கட்சியான பா.ஜ.க இன்று போராட்டத்தில் இறங்கியது. இந்தப் போராட்டத்தை, முன்னாள் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகியும், தற்போது பா.ஜ.க-விலிருந்துகொண்டு மாநில எதிர்க்கட்சித் தலைவராகப் பதவிவகிப்பவருமான சுவேந்து அதிகாரி முன்னிருந்து நடத்தினார்.

அதைத் தொடர்ந்து, போராட்டம் எந்த வகையிலும் கலவரமாக மாறக்கூடாது என்பதற்காக, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஆங்காங்கே போலீஸார் கைதுசெய்துவந்தனர். அந்த வகையில், சுவேந்து அதிகாரியையும் போலீஸார் கைதுசெய்யும் விதமாக வேனில் ஏற்றிச்சென்றனர். அப்போது பெண் போலீஸ் ஒருவர் சுவேந்து அதிகாரியை வேனுக்கு அழைத்துச் செல்கையில், சுவேந்து அதிகாரி பெண் போலீஸிடம், “என் உடலைத் தொடாதே. நீ ஒரு பெண், நான் ஒரு ஆண்” எனக் கூறியதாகத் தெரிகிறது.

இது தொடர்பான வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறது. மேலும், பெண் போலீஸை எச்சரித்த சுவேந்து அதிகாரி, தான் சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்று கூறி ஆண் போலீஸை அழைத்ததாகவும் கூறப்படுகிறது.