ரண்டமூழம் படமாக இனி வாய்ப்பே இல்லை ; மோகன்லால்

பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மகாபாரதத்தை தழுவி எழுதிய ரண்டமூழம் நாவல், ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிக பிரமாண்டமான படமாக உருவாக இருப்பதாக பல வருடங்களாக சொல்லப்பட்டு வந்த நிலையில் கடந்த 2016ல் இதுகுறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.. மோகன்லால் பீமனாக நடிக்க, துபாயை சேர்ந்த தொழிலதிபர் பி.ஆர்.ஷெட்டி என்பவர் தயாரிப்பில் உருவாக இருந்த இந்தப்படத்தை பிரபல விளம்பரப்பட இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் இயக்குவதாக இருந்தது.

ஆனால் இந்த படத்திற்காக தனது 'ரெண்டமூழம்' நாவலை கொடுத்த பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், ஒரு கட்டத்தில் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் தன்னிடம் செய்த ஒப்பந்தப்படி, இந்தக்கதையை மூன்று வருடங்களில் படமாக்கவில்லை என்றும், அதனால் இந்த படத்திற்கு தன்னுடைய கதையை கொடுப்பதில்லை என முடிவெடுத்துவிட்டதாகவும் கதையை தன்னிடம் திருப்பிக் கொடுக்குமாறும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த பிரச்சனை காரணமாக இந்தப்படத்தை தயாரிக்கும் எண்ணத்தையே கைவிட்டுவிட்டார் படத்தின் தயாரிப்பாளர்.

ஆனால் கமலுக்கு ஒரு மருதநாயகம் படம் போல மோகன்லாலுக்கு இந்த ரெண்டமூழம் படம் ஒரு கனவுப்படமாகவே இருந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படம் குறித்து மோகன்லாலிடம் கேட்கப்பட்டபோது, ' இனி ரெண்டமூழம் படம் உருவாவதற்கு வாய்ப்புகளே இல்லை.. அது அப்போதே நிகழ்ந்திருக்க வேண்டும். ஆனால் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா தாக்கம் காரணமாக சூழ்நிலையும் அப்படியே மாறிவிட்டது. அதேசமயம் தற்போது எம்டி வாசுதேவர் எழுதிய சிறுகதையான ஒலவும் தீரவும் என்கிற குறும்படத்தில் பிரியதர்ஷன் டைரக்ஷனில் நடித்து ஆறுதலை தேடிக்கொண்டேன்” என்று கூறியுள்ளார் மோகன்லால்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.