சென்னை: ஹாலிவுட்டில் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தை பல முறை பார்த்து உலக சாதனை படைத்த ரமிரோ அலானிஸ் பற்றி சமீபத்தில் பரபரப்பாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், அப்படியொரு சாதனையை கமல்ஹாசனின் விக்ரம் படத்தை பார்த்து நம்ம ஊர் இளைஞர் உதய பாரதி செய்து உலக சாதனை படைத்துள்ளார்.
கமல்ஹாசனின் வெறித்தனமான ரசிகரான அவர் ஏன் இப்படியொரு சாதனையை செய்ய முடிவு செய்தேன் என்பது குறித்தும் பேசியுள்ளார்.
இமாலய வெற்றி
விஸ்வரூபம் 2 படத்தின் தோல்விக்கு பிறகு இந்தியன் 2 படத்தை கமல் ஆரம்பித்தார். ஆனால், அந்த படம் தயாரிப்பு பணிகள் காரணமாக கிடப்பில் போடப்பட்ட நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் மற்றும் சூர்யா நடித்த விக்ரம் திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகி 400 கோடிக்கும் மேல் வசூல் செய்து இமாலய வெற்றி படைத்தது.

100 நாட்கள் ஓடி சாதனை
புதிய படங்கள் வெளியாகி ஒரு வாரம் கூட தியேட்டரில் தாக்குப் பிடிக்க முடியாத சூழலில் கமல்ஹாசனின் விக்ரம் படம் 100 நாட்கள் தியேட்டரில் ஓடி மற்றொரு சாதனையும் சமீபத்தில் படைத்தது. செல்லும் இடமெல்லாம் விக்ரம் படத்தின் மூலம் கமலுக்கு மேலும், புகழ் வெளிச்சமும் பாராட்டுக்களும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அந்த படத்தை பார்த்தே இளைஞர் ஒருவர் சூப்பர் சாதனை படைத்துள்ளார்.

51 முறை விக்ரம் படம்
உதய பாரதி எனும் இளைஞர் விக்ரம் படத்தை 51 முறை தியேட்டரில் பார்த்து உலக சாதனை படைத்துள்ளார். அவரது சாதனை லிங்கன் புக்ஸ் ஆஃப் ரெகார்ட்ஸில் இடம்பிடித்திருக்கிறது. வெளிநாடுகளில் தான் இதுபோன்ற சாதனைகளை கேள்விப்பட்டு வந்த நிலையில், கமல் ரசிகர் ஒருவரே இப்படியொரு சாதனையை படைத்திருக்கிறார்.

292 முறை
சமீபத்தில் ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தை ரமிரோ அலானிஸ் எனும் வெளிநாட்டு இளைஞர் அதிகபட்சமாக 292 முறை தியேட்டரில் மூன்று மாதங்களில் தொடர்ச்சியாக பார்த்து கின்னஸ் உலக சாதனை படைத்திருந்தார். இப்போ நம்ம ஊரிலும் இது போல, தியேட்டரில் அதிக முறை படங்களை பார்த்து சாதிக்க இளைஞர்கள் கிளம்பி உள்ளனர்.

கமலுக்கு தெரியணும்
நடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகராக சிறு வயது முதலே இருந்து வருகிறேன். விக்ரம் படத்தை அதிக முறை பார்த்து சாதனை செய்ய வேண்டும் என்பதெல்லாம் என் ஆசை கிடையாது. 50 முறை தியேட்டரில் நம்முடைய விக்ரம் படத்தை ஒரு ரசிகர் பார்த்துள்ளானா? யார் அவன் என ஒரு நிமிஷம் கமல் சார் திரும்பிப் பார்ப்பார் இல்லையா? அதுக்காகத்தான் இந்த முயற்சி என விருது பெற்ற பிறகு உதய பாரதி பேசியுள்ளார்.