கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தாவின் அரசுக்கு எதிராக பாஜ நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இந்த அரசை கண்டித்து கொல்கத்தாவில் உள்ள தலைமை செயலகத்தை நோக்கி பேரணி நடத்தும் போராட்டத்தை பாஜ அறிவித்தது. அதன்படி நேற்று பேரணி நடந்தபோது, போலீசார் அதை தடுத்து நிறுத்தினர். இதனால், ஹவுரா பாலம் அருகே போலீசாருக்கும் பாஜ தொண்டர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. பாஜ.வினர் வன்முறையில் ஈடுபட்டனர். போலீசார் மீது கற்களை வீசி தாக்கினர்.
அவர்களை கலைப்பதற்காக போலீசார் தடியடி நடத்தி, தண்ணீரை பீச்சியடித்தனர். கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். போராட்டத்தில் ஈடுபட்ட பாஜவை சேர்ந்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி உள்ளிட்ட பாஜ தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். மத்திய கொல்கத்தாவின் புர்ராபஜார் பகுதியில் உள்ள காவல் நிலையம் அருகே போலீஸ் காருக்கு தீ வைக்கப்பட்டது. போலீசாரை பாஜ.வினர் கல்வீசி தாக்கும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த மோதலில் ஏராளமான போலீசார், பாஜ.வினர் காயமடைந்தனர். இந்த மோதல் காரணமாக, மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.