ராணி எலிசபெத் உடலுக்கு அஞ்சலி செலுத்த நாள்கணக்கில் காத்துக்கிடக்கும் மக்கள்

லண்டன்,

இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் உடல், ஓக் மரத்தைக்கொண்டு தயாரிக்கப்பட்ட சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அவர் உயிர்பிரிந்த பால்மோரல் கோட்டையில் இருந்து கடந்த 11-ந்தேதி, ஸ்காட்லாந்தின் தலைநகரான எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

முதலில் உடல் அங்குள்ள ஹோலிரூட் ஹவுஸ் மாளிகையில் வைக்கப்பட்டது. அங்கு அரச குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் ராணி எலிசபெத்தின் உடல் அங்குள்ள செயிண்ட் கில்ஸ் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டிக்கு மரியாதை செலுத்தினர்.

அங்கு எலிசபெத் என்ற ஒரு பெண் 7 முறை வரிசையில் மணிக்கணிக்கில் காத்துக்கிடந்து ராணியின் உடலுக்கு மீண்டும் மீண்டும் அஞ்சலி செலுத்தியதாக தெரிவித்தார்.

இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “நான் மீண்டும் மீண்டும் வரிசையில் சென்று ராணிக்கு அஞ்சலி செலுத்தினேன். ஏனென்றால் அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. நான் என் மரியாதையை இப்படி செலுத்த விரும்பினேன். ஒவ்வொரு முறையும் தேவாலயத்துக்குள் சென்று, ராணிக்கு அஞ்சலி செலுத்தி வார்த்தைக்கு வராத உணர்வை அனுபவித்தேன்” என தெரிவித்தார்.

அங்கு 24 மணி நேர அஞ்சலிக்கு பின்னர் ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டி, எடின்பரோ விமான நிலையத்துக்கு நேற்று எடுத்துச்செல்லப்பட்டது. அங்கிருந்து ராணியின் உடல் அடங்கிய சவப்பெட்டியை அவரது மகள் இளவரசி ஆனி விமானப்படையின் விமானத்தில் நேற்று லண்டன் எடுத்துச்சென்றார்.

லண்டனில் ராணியின் உடலை மன்னர் சார்லசும், ராணி கமிலாவும் பெற்றுக்கொண்டனர்.

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு ராணியின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு ‘பவ்’ அறையில் அரண்மனை அதிகாரிகளும், பணியாளர்களும் ராணிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இன்று பிற்பகலில் ராணியின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கி வண்டியில் ஏற்றப்பட்டு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டு, பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்படுகிறது.

வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஒரு மேடையில் ராணி உடல் அடங்கிய சவப்பெட்டி வைக்கப்படுகிறது. சவப்பெட்டியின் மீது கிரீடம் மற்றும் செங்கோல் ஆகியவை வைக்கப்படுகின்றன.

இன்று உள்ளூர் நேரப்படி மாலை 5 மணி முதல், இறுதிச்சடங்கு நடைபெறுகிற 19-ந்தேதி காலை 6.30 மணி வரை 24 மணி நேரமும் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை பார்த்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம்.

ஆனால் விமான நிலைய சோதனை போன்றதொரு சோதனையை கடந்துதான் பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்துக்குள் நுழைய முடியும். சிறிய அளவிலான பைகளை மட்டுமே பொதுமக்கள் எடுத்துச்செல்ல முடியும்.

பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பல லட்சம் மக்கள் திரண்டு வருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

ராணியின் உடல் நேற்று லண்டன் நகருக்கு வந்து சேருவதற்கு முன்பாகவே அங்குள்ள லாம்பேத் பாலம் அருகில் பொதுமக்கள் வந்து குவியத்தொடங்கி விட்டனர். அவர்கள் தொடர்ந்து வரிசையில் காத்து நிற்கிறார்கள்.

இலங்கை வம்சாவளியான 56 வயது வனேசா நாதகுமாரன் என்ற பெண், வரிசையில் முதல் ஆளாய் இடம்பிடிக்க நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) முதல் காத்து நிற்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, “இது ஒரு தனித்துவமான தருணம். வாழ்நாள் நிகழ்வு. காமன்வெல்த் நாடுகளுக்கும், உலகத்துக்கும் மாபெரும் சேவையாற்றிய ராணிக்கு நாங்கள் இப்படி காத்துக்கிடந்து அஞ்சலி செலுத்த விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

இப்படி பலர் குடும்பம் குடும்பமாய் வந்து கூடாரம் அமைக்காத குறையாய் தேவையான சாப்பாடு, தண்ணீர், அத்தியாவசிய பொருட்களுடன் வந்து காத்துக்கிடக்கின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.