தோஹா, கத்தாரில், ஆரம்ப பள்ளியில் படித்து வந்த கேரளாவை சேர்ந்த 4 வயது சிறுமியை பள்ளி பேருந்துக்குள் வைத்து தவறுதலாக பூட்டியதை அடுத்து சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள செங்கனசேரியை சேர்ந்த அபிலாஷ் சாக்கோ, சவும்யா தம்பதியினர், மேற்காசிய நாடான கத்தாரில் பணியாற்றுகின்றனர்.இவர்களுக்கு, 4 வயதில் மின்ஸா மரியம் ஜேகப் என்ற மகள் இருந்தார்.கத்தாரின் அல் வாக்ராவில் உள்ள ஆரம்ப பள்ளியில் படித்து வந்த இவர், 11ம் தேதி காலை பேருந்தில் பள்ளிக்குச் சென்றார்.
வழியில் பேருந்திலேயே துாங்கிவிட்டார். பள்ளி வந்ததும் மற்ற மாணவ – மாணவியர் இறங்கி சென்றனர்.ஆனால் மின்ஸா பேருந்திலேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். இதை கவனிக்காத பேருந்து ஊழியர்கள், கதவுகளை அடைத்துவிட்டு சென்றனர்.
பள்ளி முடிந்து புறப்படும் போது, பேருந்துக்குள் மாணவி மின்ஸா மயக்க நிலையில் இருந்ததை பேருந்து ஊழியர்கள் கண்டனர்.உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டும் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். பேருந்து கதவுகளை அடைத்ததால் அதிக வெப்பம் மற்றும் மூச்சு திணறல் காரணமாக சிறுமி இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.சிறுமியின் உடலை கேரளா எடுத்து வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ‘இந்த விவகாரம் தொடர்பாக முறையான விசாரணை நடத்தப்படும்’ என, கத்தார் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement