சென்னை: வடகிழக்குப் பருவமழை காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் வெ.இறையன்பு அறிவுரை வழங்கினார்.
வடகிழக்குப் பருவமழை அக்டோபர் மாதம் தொடங்க உள்ள நிலையில் அதுதொடர்பான ஆயத்தப் பணிகள் குறித்து தலைமைச் செயலர் வெ.இறையன்பு தலைமையில், தலைமைச் செயலகத்தில் துறை அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்தில், அரசுத் துறைகளின் செயலர்கள், துறைத் தலைவர்கள், ராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட அரசுத் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு பேசியதாவது:
பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சமீபகாலங்களில் ஆறுகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன. மேலும், பாதிப்புக்குள்ளாகக்கூடிய பகுதிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது. எனவே, நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சிநிர்வாகம் ஆகிய துறைகள் மழைநீரை சேமித்து வைக்க மேற்கொண்டு வரும் திட்டப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பேரிடர் தொடர்பான வெள்ளத்தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதால், வடகிழக்குப் பருவமழை தொடங்கும் முன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
குறைந்த நேரத்தில் ஏற்படும் அதிகபட்ச மழைப் பொழிவு காரணமாக மழைநீர் தேங்குதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்தல் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதைத் தடுக்க வானிலை குறித்த முன்கணிப்பு தகவல்களை இந்திய வானிலை ஆய்வுமையம் முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், பொதுமக்கள் தங்கள் பயண திட்டங்களை வரையறுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும்.
இதற்கான தகவல் பரிமாற்ற வசதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர், செய்தித்துறை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து ஏற்படுத்த வேண்டும்.
பேரிடர் காலங்களின்போது பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏதுவாக நிவாரண மையங்களைத் தயார் நிலையில் வைக்க வேண்டும். வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படும் அனைவருக்கும் உணவு தங்குதடையின்றி வழங்க அத்தியாவசியப் பொருட்களை இருப்பு வைக்க வேண்டும். சாலை சேதங்களை உடனுக்குடன் சரி செய்து போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் தயார் செய்ய வேண்டும்.
பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் விரைவாக ஈடுபட முப்படையினரும் வீரர்கள், உபகரணங்களைத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டும். ஏரி மற்றும் குளங்களின் கரைகளைப் பலப்படுத்த வேண்டும். சமுதாய உணவுகூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வெள்ளநீரை வெளியேற்றும் பம்பு செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகள் முன்னரே பரிசோதித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மழை, வெள்ளக்கால தொற்று நோய்கள் குறித்து சுகாதாரத் துறை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். புயல் பாதுகாப்பு நிவாரண மையங்கள் மற்றும் கூடுதல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.
கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்கள், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மண்டபங்களில், உடனடியாக ஆய்வு செய்து மழைநீர் வடிகால்கட்டும் பணியை மேற்பார்வையிட்டு விரைவாக முடிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும். எதிர்வரும் வடகிழக்குப் பருவமழை காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தி னார்.