புதுடெல்லி: இலங்கையில் உள்ள தமிழ் சிறுபான்மையினர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுகளை ஏற்படுத்துவதில் அந்நாட்டு அரசு அலட்சியத்துடன் செயல்பட்டு வருவதாகவும், குறிப்பிடத்தக்க அளவிலான முன்னேற்றம் எதுவும்இல்லை என்றும் ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் (யுஎன்ஹெச்ஆர்சி) இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடன் உள்ளது.
அந்த வகையில், இலங்கை அரசியலமைப்பின் 13-வது திருத்தத்தை முழுமையாக செயல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களை வழங்குதல், இனப்பிரச்சினை தீர்வுக்கான அர்ப்பணிப்பு செயல்பாடுகளில் இலங்கை அரசு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை என்பது இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. அங்கு மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் எதிர்பார்ப்பு.
இலங்கை தமிழர்களுக்கான நீதியை உறுதி செய்தல், அவர்களின் கண்ணியம், அமைதி காக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், பிராந்தியத்திற்கான ஒருமைப்பாடு, ஒற்றுமை, ஸ்திரத்தன்மை நிலைநாட்டப்பட வேண்டும் என்பதில் இந்தியாவுக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
ஐ.நா.வின் கொள்கை வழிகாட்டுதலின்படி மனித உரிமைக்கான பாதுகாப்பு, மேம்படுத்துதல், ஆக்கப்பூர்வமான சர்வதேச உரையாடல், ஒத்துழைப்பு ஆகியவற்றில் மாநிலங்களுக்கு உண்டான பொறுப்பை இந்தியா எப்போதும் நம்புகிறது என மனித உரிமை கவுன்சில் கூட்டத்தின் 51-வது அமர்வில் நடைபெற்ற இலங்கை மீதான விவாதத்தின்போது இந்தியா இவ்வாறு தெரிவித்துள்ளது.
380 கோடி டாலர் உதவி: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக இந்த ஆண்டில் மட்டும் 380 கோடி டாலர் மதிப்பிலான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளது. இலங்கைக்கு செல்லும் இந்திய பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, இலங்கைக்கு வரும் இந்திய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் சரிவடைந்துள்ளதாக கூறப்படுகிறது.