திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழக்கம்போல் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே உள்ளது. இதனால் சர்வ தரிசனத்தில் சென்று சுவாமியை தரிசிக்க நேற்று 14 மணி நேரம் ஆனது. திங்கட்கிழமையன்று ஏழுமலையானை 74,231 பேர் தரிசித்தனர். இதில், 33,591 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தினர். சுவாமி உண்டியலில் பக்தர்கள் ரூ.5.14 கோடி காணிக்கை செலுத்தினர்.
அன்னபிரசாதத்தில் இயற்கை வேளாண் வகைகள்: திருமலையில் உள்ள அன்னமைய்யா பவனில் நேற்று தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தலைமையில், சித்தூர், கடப்பா, திருப்பதி, நெல்லூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த இயற்கை வேளாண் விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், அதிகாரி தர்மா ரெட்டி பேசுகையில், “இயற்கை முறையில் விளைவிக்கும் காய்கறிகள் மற்றும் சமையல் பொருட்களை கொண்டு சுவாமிக்கு சமீப காலமாக நைவேத்யம் படைக்கப்பட்டு வருகிறது. இனி திருமலையில் அன்னபிரசாதத்திற்கும், பக்தர்களின் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட காய்கறிகளை உபயோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அன்னதானத்திற்காக பலர் காய்கறிகளை தேவஸ்தானத்திற்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இது இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டிருந்தால் இன்னும் ஆரோக்கியமாக இருக்கும் என்பதால், இயற்கை வேளாண் விவசாயிகளிடம் ஆலோசனை நடத்தப்படுகிறது. நீங்கள் கூறும் சில அணுகுமுறைகளை வைத்து, எங்களுக்கு இலவசமாக காய்கறி வழங்கும் நன்கொடையாளர்களுக்கு அந்த முறையை தெரிவித்து, அதன்படி காய்கறி உற்பத்தி செய்து, அவற்றை அன்ன பிரசாத திட்டத்தில் உபயோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது்” என்றார்.