பருவமழை முன்னெச்சரிக்கை: இறையன்பு பிறப்பித்த உத்தரவு!

வடகிழக்கு பருவமழை குறித்த ஆயத்த பணிகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. ) தலைமைச் செயலகத்தில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தலைமையில் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் அரசு செயலாளர்கள், துறைத்தலைவர்கள், இராணுவம், விமானப்படை, கப்பற்படை, கடலோர காவல்படை, இந்திய வானிலை ஆய்வு மையம், ஒன்றிய நீர்வள ஆணையம், தேசிய பேரிடர் மீட்புப் படை உள்ளிட்ட ஒன்றிய அரசுத்துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய தலைமைச் செயலாளர் இறையன்பு நீர்வள ஆதாரத் துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி நிருவாகம் ஆகிய துறைகள் மழை நீரை சேமித்து வைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினார்.

பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் சமீப காலங்களில் ஆறுகளில் வெள்ளத்தால் ஏற்படும் பாதிப்புகள் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. மேலும், பாதிப்பிற்குள்ளாகக் கூடிய பகுதிகளின் எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது. கடந்த ஒன்றரை வருடத்தில் பேரிடர் தொடர்பான வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள போதுமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு மேற்படி பணிகள் விரைந்து முடிக்கப்பட வேண்டும்.

மேலும் குறைந்த நேரத்தில் ஏற்படும் அதிகபட்ச மழைப் பொழிவு காரணமாக மழைநீர் தேங்குதல் மற்றும் குடியிருப்பு பகுதிகளை மழைநீர் சூழ்தல் போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றன. இதனை தடுக்கும் வண்ணம் வானிலை குறித்த முன்கணிப்பு தகவல்களை இந்திய வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே வழங்கும்பட்சத்தில், பொதுமக்கள் தங்கள் பயண திட்டங்களை வரையறுத்துக்கொள்ள ஏதுவாக இருக்கும். இதனால் வாகன நெரிசலை தவிர்த்து பொதுமக்கள் இயல்பாக தங்கள் பயணங்களை மேற்கொள்ளமுடியும். இதற்கான தகவல் பரிமாற்ற வசதிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆகியவை இணைந்து செயல்பட வேண்டும்.

பேரிடர்காலங்களில் பொதுமக்களை நிவாரண மையங்களில் தங்க வைக்க ஏதுவாக மேற்படி மையங்களை நல்ல முறையில் பராமரித்து தயார் நிலையில் வைத்து, வெள்ளக்காலங்களில் பாதிக்கப்படக்கூடிய அனைவருக்கும் போதுமான உணவு பொட்டலங்கள் தங்கு தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய ஏதுவாக தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் கூறினார்.

பேரிடர்காலங்களில் ஏற்படும் சாலை சேதங்களை உடனுக்குடன் செப்பனிட்டு போக்குவரத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்திட வேண்டும். பேரிடர் காலங்களில் மீட்பு நடவடிக்கைகளில் விரைந்து ஈடுபடும் வண்ணம் தங்களது வீரர்கள் மற்றும் மீட்பு உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருக்க முப்படை அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கினார்.மேலும் பேரிடர் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கும் பொருட்டு, பாலங்கள் மற்றும் மழைநீர் வடிகால்களில் உள்ள அடைப்புகளை அகற்ற வேண்டுமெனவும் ஏரி மற்றும் குளங்களின் கரைகளை பலப்படுத்த வேண்டுமெனவும் கூறினார்.

நீர்வழி, கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாருதல் போன்ற பணிகளை நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நீர்வள ஆதாரத் துறை மற்றும் நகராட்சித் துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும்.

நீர் வழிகளின் கரைகளை பலப்படுத்த போதுமான மணல் மூட்டைகளை இருப்பு வைத்தல், சமுதாய உணவு கூடங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சென்னை பெருநகர மாநகராட்சி, அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள் வெள்ள நீரை வெளியேற்றும் பம்பு செட்டுகள் மற்றும் பிற உபகரணங்களின் செயல்பாடுகள் முன்னரே பரிசோதித்து தயார் நிலையில் வைக்க வேண்டும். மழை மற்றும் வெள்ள காலங்களில் ஏற்படும் தொற்று நோய் குறித்து சுகாதாரத்துறை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். வெள்ள காலங்களில் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்க சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்நடை பராமரிப்பு துறைக்கு அறிவுரை வழங்கினார்.

புயல் பாதுகாப்பு நிவாரண மையங்கள் மற்றும் கூடுதல் நிவாரண மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். கண்காணிப்பு அலுவலர்கள் அனைத்து மாவட்டங்கள் மற்றும் சென்னை பெருநகர மாநகராட்சிக்குட்பட்ட மண்டலங்கள் ஆகியவற்றில் உடனடியாக ஆய்வு செய்து மழைநீர் வடிகால் கட்டும் பணியை மேற்பார்வையிட்டு விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் எனவும், எதிர்வரும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில், பேரிடர்களின் சவால்களை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத் துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டுமெ என அறிவுறுத்தினார் .

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.