சென்னை: உதயநிதி தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
உதயநிதியுடன் கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபஹத் பாசில் ஆகியோர் நடித்து வரும் மாமன்னன் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற மாமன்னன் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி
‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான உதயநிதி, அடுத்தடுத்து சில ஜாலியான கமர்சியல் படங்களில் நடித்திருந்தார். சீனு ராமசாமி இயக்கத்தில் அவர் நடித்த ‘கண்ணே கலைமானே’ திரைப்படம், உதயநிதியின் நடிப்புக்கு நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொடுத்தது. கடந்த சில வருடங்களாக அரசியலிலும் தீவிரமாக செயலாற்றி வரும் உதயநிதி, கடைசியாக நெஞ்சுக்கு நீதி படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவர் முதன்முறையாக மாரி செல்வராஜ் இயக்கும் ‘மாமன்னன்’ படத்தில் கமிட் ஆனார்.

மாரி செல்வராஜ் பேசும் அரசியல்
‘பரியேறும் பெருமாள்’ மூலம் இயக்குநராக அறிமுகமான மாரி செல்வராஜ், முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் அவர் இயக்கிய ‘கர்ணன்’, விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல், கலெக்ஷனிலும் மாஸ் காட்டியது. இரண்டு படங்களிலும் சாதிய ரீதியாக ஒடுக்கப்படும் அரசியலை பின்னணியாக வைத்து இயக்கியிருந்தார். இந்நிலையில், அரசியலில் பிசியாக இருக்கும் உதயநிதியுடன் அவர் இணைந்துள்ளது, அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் தரமான கூட்டணி
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஹீரோவாக நடிக்கும் ‘மாமன்னன்’ படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். அதேபோல், கீர்த்தி சுரேஷ், ஃபஹத் பாசில் வைகைப்புயல் வடிவேலு என மொத்த கூட்டணியும், ‘மாமன்னன்’ படத்திற்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வேகமாக நடைபெற்று வந்தது.

படப்பிடிப்பை நிறைவு செய்த மாமன்னன் படக்குழு
இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக, படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இதனை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு, அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது. இதனால், விரைவில் மாமன்னன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் மாமன்னன் படத்தில் இருந்து அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.