கொல்கத்தா: போலீஸ் வாகனத்திற்கு முறையாக எப்படி தீ வைப்பது என்பதே பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் என்று திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம் பி மஹூவா மொய்த்ரா குற்றம் சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் ஊழலில் திளைப்பதாக குற்றம் சாட்டி செவ்வாய்க்கிழமை பாஜகவினர் ‘நபானா அபிஜான்’ என்ற பேரணிக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இந்த பேரணியின் போது ஏற்பட்ட மோதலில் போலீஸ் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
தனது அனல்பறக்கும் பேச்சுக்களுக்கும், கிண்டலுக்கும் பெயர் போன திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹூவா மொய்திரா, பேரணியில் பாஜகவினர் சிலர் போலீஸ் வாகனத்திற்கு தீவைக்கும் படத்தினை பகிர்ந்து, பாஜவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “பாஜகவின் புதிய கல்விக் கொள்கையின் முதல் பாடம் எப்படி முறையாக போலீஸ் வாகனத்திற்கு தீவைப்பது என்பதே.
மேற்கு வங்க அரசு போகிஜி அஜய் பிஷ்ட்-ன் கொள்கையை பின்பற்றி நேற்று பொதுத் சொத்துக்களை சேதப்படுத்திய பாஜக வினர் வீட்டிற்கு புல்டோசர்களை அனுப்பினால் என்வாகும். பாஜக தனது சொந்த கொள்கையில் நிற்குமா அல்லது சட்டையைத் திருப்புமா என்று தெரிவித்துள்ளார்.
இந்தமோதல் குறித்து இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இரண்டு வீடியோக்களை பகிர்ந்து பாஜக மீது குற்றம் சாட்டியுள்ளார்.
தனது முதல் ட்வீட்டில் காவி நிற டிசர்ட் அணிந்துள்ள ஒருவர் போலீஸ் வாகனத்தில் இருக்கும் துண்டில் தீவைக்கும் க்ளோஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்து, மேற்கு வங்கத்தில் போலீஸ் வாகனத்தை எரிக்கும் தேசிய கட்சியின் கலவரக்காரர்களை அடையாளம் காணுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
जरा पहचानिये, ये किस पार्टी के ‘राष्ट्रवादी दंगाई’ पश्चिम बंगाल में पुलिस जीप जला रहे है? pic.twitter.com/9CvctuRgKT
— Srinivas BV (@srinivasiyc) September 13, 2022
மற்றொரு ட்வீடில், பாஜக கொடியுடன் இருக்கும் சிலர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கும் வீடியோ ஒன்றை பகிர்ந்து, பிரதமர் மோடி, இந்தக் கலவரக்காரர்களின் உடை, கொடியினை வைத்து அவர்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். அவரது இதயம் அவர்களை ஒருபோதும் மன்னிக்காது என்று தெரிவித்துள்ளார்.
போலீஸ் வாகனங்களுக்கு பாஜகவினர் தீவைக்கவில்லை என்று மேற்கு வங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், தங்கள் கட்சித் தொண்டர்கள் எந்த ஆயுதங்களும் வைத்திருக்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஜிகாதிகள் வந்து இந்த கலவரத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.