சத்தமே இல்லாமல் ஒரு சாதனை நிகழ்ந்திருக்கிறது. ரஜினியும், ஷாருக் கான் சென்னையில் நேற்று சந்தித்துள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி..
நடிகர் ரஜினிகாந்த், இப்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். `டாக்டர்’, `பீஸ்ட்’ படங்களை கொடுத்த நெல்சன் இயக்கி வருகிறார். இதில் ரம்யா கிருஷ்ணன், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு உள்பட பலர் நடித்து வருகிறார்கள். சென்னை ராயப்பேட்டையில் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையில் பல பகுதியில் நடந்து வருகிறது. ஈ.சி.ஆரில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் நடந்து வருகிறது. அங்கே பிரமாண்டமான செட் ஒன்றை அமைத்துள்ளனர்.
இங்குதான் ஷாருக் கான் – அட்லீ கூட்டணீயின் `ஜவான்’ படப்பிடிப்பு இரண்டு வாரங்களாக போய்க்கொண்டிருக்கிறது. ஆதித்யா ராமில் மிகப்பெரிய வீடு ஒன்றை செட் போட்டுள்ளனர். அதில் தான் ஷாருக் கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, சான்யா மல்கோத்ரா எனப் பலரும் நடித்து வருகிறார்கள். இன்னும் சில வாரங்கள் இங்கே படப்பிடிப்பு பரபரக்கும் என்கிறார்கள்.

சரிவிஷயத்திற்கு வருவோம். ‘ஜெயிலர்’ படப்பிடிப்பும், ‘ஜவான்’ படப்பிடிப்பும் அருகருக்கே நடந்ததில், ரஜினி – ஷாருக் கானின் சந்திப்பு நடந்திருக்கிறது. நேற்று அங்கே ரஜினியின் படப்பிடிப்பு நடக்கிறது எனக் கேள்விப்பட்ட ஷாருக், உடனே `ஜெயிலர்’ செட்டுக்குள் சென்று ரஜினியைச் சந்தித்திருக்கிறார். 20 நிமிடங்கள் நடந்த இந்த சந்திப்பில், அட்லீயும், நெல்சனும் உடனிருந்திருக்கிறார்கள்.
இதற்கு முன் இவர்கள் இருவரும் நயன்தாராவின் திருமணத்தில் சந்தித்துக் கொண்டனர். சில வருடங்களுக்கு முன்பு ‘உயிரே’, ‘ஹே ராம்’ படங்களின் மூலம் தமிழில் ஷாருக் கானுக்கு வரவேற்பு இருந்ததால், அவரது ‘ரா ஒன்’ படத்தை தமிழில் டப் செய்திருந்தார். அதற்காக சென்னை வந்திருந்தார். அந்த விழாவில் ரஜினியும் வந்திருந்து ஷாருக்கை வாழ்த்தினார். அதன்பிறகு ரஜினி, தீபிகா படுகோனே நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கும் ஷாருக் கான் வந்திருந்தார். இப்படி இவர்கள் இருவருக்குமான பழைய நட்பு இழையோடிக் கொண்டிருக்கும் சூழலில்.. மீண்டும் நட்பைப் புதுப்பிக்கும் வகையில் நேற்றைய சந்திப்பு நிகழ்ந்திருக்கிறது. ஷாருக்கை நலம் விசாரித்த ரஜினி அவரிடம், ” நீங்க நேரடித் தமிழ்ப் படமும் பண்ணுங்க” என விரும்பிக் கேட்டுக்கொண்டதுடன், தன் வீட்டிற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்.
‘ஜெயிலர்’, ‘ஜவான்’ படப்பிடிப்புகள் ஆதித்யாராமில் தொடர்ந்து நடக்கிறது என்பதால் இவர்கள் சில நாட்களாவது அடிக்கடி சந்தித்துக் கொள்வது சகஜமாக இருக்கும் என்கிறார்கள் யூனிட்டில் உள்ளவர்கள்.