பனாஜி: கோவா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ உட்பட 8 எம்எல்ஏ.,க்கள் புதன்கிழமை பாஜகாவில் இணையப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோவா மாநில சட்டப்பேரவை மொத்தம் 40 இடங்களைக் கொண்டது. இதில் ஆளும் பாஜக 20 இடங்களில் வென்று, பெரும்பான்மை பலத்தில் ஆட்சி அமைத்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
இந்த நிலையில், புதன்கிழமை திகம்பர காமத், மைக்கல் லோபோ தலைமையில் 8 காங்கிரஸ் எம்எல்ஏகள் மாநில பாஜக முதல்வர் பிரமோத் சாவந்த்-ஐயும், சபாநாயகர் விதான் சபாவையும் சந்தித்தனர். சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில், எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்திப்பது வழக்கத்திற்கு மாறான ஒன்று.
ஒருகட்சியின் மொத்த எம்எல்ஏக்களில் மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் வேறு கட்சிக்கு மாறும் போது அவர்கள் மீது கட்சித் தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியாது என்பதால், 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சபாநாயரை சந்தித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் கோவா மாநில பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே செய்தி நிறுவனம் ஒன்றிடம், 8 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய இருப்பதாக தெரிவித்தார்.
இதுகுறித்து திகம்பர் காமத் “இந்த தகவல் தனக்கு அதிர்ச்சியையும் திகைப்பையும் ஏற்படுத்தியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட மைக்கேல் லோபோவிடம் பிரிவினை குறித்து எதுவும் பேசவில்லை” என்று தெரிந்திருந்தார்.
முன்னதாக, கடந்த ஜூலை மாதத்திலேயே திகம்பர் காத்தும், மைக்கேல் லோபோவும் கட்சி மாறப்போவதாக கூறப்பட்டுவந்தது. இதனைத் தொடர்ந்து கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி அவர்களைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.