விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த இளைஞர் டேவிட். இவர், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக வேலை செய்து வருகிறார். சமீபத்தில், ஆரோவில் அருகேயுள்ள பிரபல தனியார் உணவுக்கடை ஒன்றிற்கு நண்பருடன் சென்று பர்கர் வாங்கியுள்ளார். அதில் பிளாஸ்டிக் பொருள் கிடப்பதை கண்டு அதிர்ந்தவர், அதை சோதித்துப் பார்த்தபோது, ஊழியர்கள் பயன்படுத்தும் கையுறை அது என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து உணவுக்கடை ஊழியர்களிடம் கேள்வி எழுப்பியவர், அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதற்காக, தனியார் உணவுக்கடை ஊழியர்கள் மன்னிப்பு கோரியதோடு, வேறு பர்கர் தருவதாகச் சொல்லியதாகத் தெரிகிறது.

அதற்கு மறுப்பு தெரிவித்த டேவிட், “இந்த பர்கரை குழந்தைகள் தானே அதிகம் வாங்கி சாப்பிடுகிறார்கள். உங்கள் குழந்தை சாப்பிட்டிருந்தால் சாரி சொல்வீர்களா..? நான் சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? குழந்தைகளுக்கு ஏதோ ஆகியிருந்தாலோ, எனக்கு ஏதோ ஆகியிருந்தாலோ என்ன பண்ணலாம் சொல்லுங்க…” என்கிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுகந்தனிடம் பேசினோம்.“பொதுவாகவே இதுபோன்ற புகார்கள் வந்தால், அங்கு நேரடியாக ஆய்வு செய்து சம்பந்தப்பட்ட பொருளின் மாதிரியை சேகரித்து கோயம்புத்தூரில் உள்ள அரசு ஆய்வகத்திற்கு அனுப்பி வைப்போம். அதன் முடிவில், ‘பாதுகாப்பானது’ என வந்தால் மேல் நடவடிக்கை இருக்காது. ‘பாதுகாப்பற்றது’ என வரும் பட்சத்தில் வழக்குப் பதிவு செய்வோம்.
இது மட்டுமன்றி, சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஏதாவது பிழை இருந்தால் அவற்றை விரைவில் சரி செய்துகொள்ள நோட்டீஸ் கொடுப்போம். 14 நாள்களுக்குள் அவர்கள் அதை சரி செய்து கொள்ளவில்லை என்றால், நேரடியாகவே வழக்குப் பதிவு செய்வோம். இதுதான் நடைமுறை. இந்த பர்கர் வீடியோ, நேற்று மாலை தான் எங்களுக்கு தெரியவந்தது. நாங்கள் அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆய்வில் இருந்தோம். இருப்பினும், வானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலரிடம் இது குறித்து தெரிவித்து விசாரிக்கக் கூறினோம். அவரிடம் பேசுங்கள்” என்றார்.
இதனைத் தொடர்ந்து வானூர் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் மோகனிடம் பேசினோம்.“இந்த பர்கர் வீடியோ தொடர்பாக எந்த புகாரும் எங்களுக்கு வரவில்லை. செய்தியின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து, இன்று சம்பந்தப்பட்ட உணவகத்தில் ஆய்வு செய்ய இருக்கிறோம்” என்றார்.