நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களின்; மருத்துவத் துறையும் சமூக, குடும்ப சுகாதார துறையும் இணைந்து செயற்படும் முதலாவது ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் பொது மக்களுக்கு சேவை வழங்குவதை முதன்மையாகக் கொண்டு கிழக்குப் பல்கலைக்கதழகத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் 106மில்லியன் ரூபா செலவில் ஆரம்ப சுகாதார பராமரிப்பு நிலையம் (12) மட்டக்களப்பில் உள்ள பீட வளாகத்தில் திறந்துவைக்கப்பட்டது.
இந்நிகழ்வு கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
வைத்தியசாலைகள், வைத்திய அதிகாரிகள், பிராந்திய சுகாதார பராமரிப்பு அலகுகள், கிராமமட்ட தாய் சேய் பராமரிப்பு நிலையங்கள் என்பவற்றுக்கு அப்பால் பல்கலைக்கழகம் ஒன்று ஆரம்ப சுகாதார பராமரிப்பு சேவையை சமூகத்திற்கு வழங்கியிருக்காத காலகட்டத்தில் அந்த வாய்ப்பை சமூகத்திற்கு வழங்கியிருப்பதாக கிழக்குப் பல்கலைக்கழகம் தெரிவித்தது.

இம் முழுமையான ஆரம்ப சுகாதார பாராமரிப்பு மையமானது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அடையாளமாக இருந்து பேராசிரியர்களின் சமூகம் சார் சிந்தனைகளை செயல்வடிவமாக்கும் ஓரிடமாக செயற்படும் என இப்பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வல்லிபுரம் கனகசிங்கம் தெரிவித்தார்.
கிழக்குப் பல்கலைக்கழகப் பிராந்தியத்தில்:
• நோய்களுக்கான ஆரம்ப சமூகப் பராமரிப்பு சேவைகள்,
அதாவது பிராந்தியத்தில் அதிகரித்துவரும் நீரிழிவு போன்ற நோய்களுக்கான ஆரம்ப சுகாதார பராமரிப்பை வழங்குதல்,
• நோயாளிகள், கர்ப்பிணித் தாய்மார் மற்றும் மருத்துவ மாணவர்களுக்கான சுகாதாரக் கல்வி, குறிப்பாக போஷாக்கு மற்றும் மற்றும் உணவுப் பழக்க வழக்கம் தொடர்பான விழிப்புணர்வுகளை வழங்கல்
• பிரதேசத்தில் காணப்படும் நோய்கள் பற்றிய ஆய்வு, பிரதேசத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள தொலு நோய் போன்றவற்றை ஆராய்ந்து பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு சமர்ப்பித்து அதனைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவி செய்தல் மற்றும்
• உள்நாட்டுஃ வெளிநாட்டு வைத்தியர்களுக்கான மேலதிக பயிற்சிகளை வழங்குதல் மருத்துவக் கல்வியைப் பெற்ற வைத்தியர்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் தேர்ச்சி பெறுவதற்கு அவசியமான பயிற்சிகளை இங்கு பெற்றுக் கொள்ளல்
ஆகிய செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்நிலையம் உருவாக்கப்பட்டதாக அதன் ஆரம்பகர்த்தாவும் பல்கலைக்கழகத்தின் சுகாதார பராமரிப்புத் துறைத் தலைவருமான வைத்திய காலாநிதி கே. அருளானந்தம் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம், பதில் உபவேந்தர் வைத்திய கலாநிதி கருணாகரன், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி கலாமதி, பிராந்திய சுகாதாரா சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் காலநிதி சுகுணன், உதவி பிரதேச செயலாளர் திருமதி சுதர்ஷினி, அயல் கிராமங்களின் தலைவர்கள், சுகாதாரப் பராமரிப்பு, விஞ்ஞான பீடத்தின் துறைத் தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், ஆகியோர் பங்குபற்றி சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.