பெங்களூரு: கர்நாடக அரசு சார்பில் இந்தி தினம் கொண்டாடப்படுவதை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையில் மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கர்நாடக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் இந்தி தினம் கொண்டாடப்பட்டது. கன்னட மொழியை தவிர்த்து இந்தி தினம் கொண்டாடப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பெங்களூருவில் சட்டமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு, ஜே.டி.எஸ். எம்.எல்.ஏக்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
இதேபோல கர்நாடகத்தின் பல்வேறு இடங்களில் கன்னட அமைப்பினர், பாஜக அரசின் நடவடிக்கைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது கன்னட மொழியை கீழே தள்ளிவிட்டு வேறு மொழியை தூக்கி பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று போராட்டக்காரர்கள் உறுதிபட தெரிவித்தனர். மேலும் கர்நாடக அரசின் வரிப்பணத்தில் இந்தி தினம் கொண்டாடப்படுவதை வன்மையாக கண்டித்தும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.