ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட நபர், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் பிடிக்கும் பாம்புகளை பத்திரமாக காட்டுக்குள் சென்று விட்டுவிடுவார்.
பாம்பு கடித்த பின்னரும் அது குறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளாததால்தான் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர்.
விஷ பாம்புகள்
இந்தியாவில் மட்டும் சுமார் 230 பாம்பு இனங்கள் இருக்கின்றன. இதில் 50 இனங்கள் நச்சு கொண்டவை. பொதுவாக பாம்பின் நஞ்சு ரத்த சிவப்பணுக்களை அழித்து, ரத்த உறைதலை தடுக்கிறது. இதன் காரணமாக மரணம் ஏற்படும். சில பாம்புகளின் நஞ்சு நரம்பு மண்டலத்தை நேரடியாக தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வருகிறது. இவ்வளவு கொடிய விஷமுள்ள பாம்புகள் தற்போது மனித ஆக்கிரமிப்புகள் காரணமாக அதன் வாழ்விடங்களை இழந்து வருகிறது.
பாம்பு மனிதன்
இந்நிலையில் பாம்புகளை பிடித்து அதை பத்திரமாக காடுகளுக்குள் கொண்டு சென்றுவிடும் ‘பாம்பு மனிதன்’ ஒருவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் சுரு மாவட்டத்தில் வசித்து வருபவர் வினோத் திவாரி. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாம்பு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். இவ்வாறு மீட்கப்படும் பாம்புகளை காடுகளில் பத்திரமாக கொண்டு விட்டுவிடுவார். ஆனால் சம்பவம் நடந்த அன்று இதுதான் அவர் பிடிக்கும் கடைசி பாம்பு என்பது திவாரிக்கு தெரிந்திருக்க வாயப்பில்லை.
நாகப்பாம்பு
45 வயதான இவர், கடந்த சனிக்கிழமையன்று சுருவின் கோகமேடி பகுதியில் நாகப்பாம்பு ஒன்று இருப்பதாகவும் அதனை பிடிக்க வேண்டும் என்றும் தகவல் கிடைத்து அப்பகுதிக்கு சென்றுள்ளார். அதே போல அங்கு ஒரு நாகப்பாம்பு ஒன்று இருந்துள்ளது. அதனை மிகவும் லவகமாக பிடித்துள்ளார். இந்நிலையில் அதனை பைக்குள் போட முயற்சித்துள்ளார். பாம்பு உள்ளே செல்லாமல் அடம் பிடித்துள்ளது. இதனையடுத்து, சிறிது முயற்சிக்கு பின்னர் மீண்டும் பாம்பை பைக்குள் போட்டுள்ளார்.
உயிரிழப்பு
எல்லாம் நல்லபடியாக முடிந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கையில் அவரது இடது கை விரலில் பாம்பு கொத்தியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத அவர், உடனடியாக பாம்பின் விஷத்தை எடுக்க விரலை வாய் வைத்து உறிஞ்சியுள்ளார். இதையே அவர் திரும்ப திரும்ப செய்துள்ளார். பின்னர் பாம்பு போடப்பட்ட பையை கட்டி பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து அருகில் சென்றுள்ளார். ஆனால் இந்த சில நிமிடங்களிலேயே அவர் உயிரிழந்துவிட்டார்.
செய்யக்கூடாதவை
இந்த காட்சிகள் அருகில் இருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளன. பொதுவாக இதுபோன்று வாய் வைத்து உறிஞ்சுதல் கூடாது. அந்த இடத்தை வெட்டவும் கூடாது. அதேபோல அந்த பகுதியை இறுகி கட்டுவதும் கூடாது. குறிப்பாக எழுந்து நடக்கக்கூடாது. அப்படி செய்வதன் மூலம் விஷம் உடல் முழுவதும் வேகமாக பரவும் அபாயம் உள்ளது என மருத்துவர்கள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். இதையெல்லாவற்றையும் திவாரி செய்துள்ளார். இதனால் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.