செங்கம் : திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பகுதியில் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா புகைக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி சீரழிந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதே பள்ளியில் சில மாணவர்கள் ராக்கிங் செய்து, ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, கஞ்சா புகைக்கும் வீடியோ வைரலாகி, பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கம் அரசு பள்ளியில் மாணவர்களின் ஒழுங்கீனமான நடவடிக்கையால் அச்சமடைந்த பெற்றோர் பலர், ஏற்கனவே தங்களது பிள்ளைகளின் டிசி வாங்கி கொண்டு சென்று வெளியூர்களில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்த்துள்ளனர். சிலர் தனியார் பள்ளிகளிலும் சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சீருடையில் இருக்கும் செங்கம் அரசு பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் மறைவிடத்தில் கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நேற்று முதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த டிஎஸ்பி சின்ராஜ் நேற்று சம்பந்தப்பட்ட அரசு பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். அப்போது தலைமை ஆசிரியரிடம், மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும். பள்ளிக்கு அருகில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், பெயரளவில் ஆய்வு மேற்கொள்ளாமல் காவல் துறை மற்றும் கல்வி துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோல், போதை பழக்கத்திற்கு அடிமையான பள்ளி மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். உரிய சிகிச்சை அளித்து அவர்களது எதிர்காலத்தையும், கல்வி நலனையும் பாதுகாக்க வேண்டும். மேலும், அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பள்ளி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு கொடுத்து சீரழிக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.