சென்னை, எழும்பூர் அரசு குழந்தைகள் மருத்துவமனையில் இன்று ஒரேநாளில் 100க்கும் அதிகமான குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவி வருகிறது. சமீப நாள்களில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பெருகி வருகிற நிலையில் வெளியாகியிருக்கும் இச்செய்தி குறித்து அதன் இயக்குநர் எழிலரசியிடம் பேசினோம்…
“ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் வழக்கமாகவே பருவநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் காய்ச்சல் ஏற்படுவது இயல்பானது. டெங்குக் காய்ச்சலும் இந்தக் காலகட்டத்தில்தான் அதிகளவில் பரவும். இதனைக் கருத்தில் கொண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அதற்கான தயாரிப்போடு செயல்படுவோம். கோவிட் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகள் எங்கும் வெளியே செல்லாததால் காய்ச்சல் பாதிப்புகள் பெருமளவில் ஏற்படவில்லை.
கோவிட்டுக்கு முந்தைய ஆண்டுகளில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் காய்ச்சல் சீசனாக இருந்திருப்பதைப் பார்த்திருப்போம். 2020 – 21 ஆகிய ஆண்டுகளில் இல்லாமல் தற்போது காய்ச்சல் பரவுவதால் அது பெரும் அதிர்ச்சியாகப் பார்க்கப்படுகிறது. இதில் அதிர்ச்சி கொள்ள எதுவுமில்லை.
இந்த காலநிலைக்கே உண்டாகும் சாதாரண வைரஸ் காய்ச்சல்தான் இது. எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் அனைத்துப் பிரிவுகளிலும் சேர்த்து மொத்தம் 837 படுக்கைகள் இருக்கின்றன. காய்ச்சல் வந்து அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு உரிய சிகிச்சைகள் வழங்கப்பட்டு அவர்கள் குணமாகிச் சென்று கொண்டிருக்கின்றனர். இது வழக்கத்துக்கு மாறானது இல்லை என்பதால் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை” என்கிறார் எழிலரசி.