மும்பை: ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 படங்கள் எல்லாம் வெளியானதில் இருந்தே ராக்கெட் வேகத்தில் வசூல் வேட்டையை தினம் தோறும் அள்ளி 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் சாதனையை படைத்தன.
அதே போல பிரம்மாஸ்திரம் படமும் ஆரம்பத்தில் ஜெட் வேகத்தில் சென்ற நிலையில், திங்கள் முதல் படுத்தே விட்டதைய்யா ரேஞ்சுக்கு பெரிய சரிவை சந்தித்து வருவது படக்குழுவை கலக்கத்தில் ஆழ்த்தி உள்ளது.
முதலில் சந்தோஷமாக உலகளவிலான பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்பை வெளியிட்டு வந்த தயாரிப்பு நிறுவனமும் அதன் பின்னர் கப்சிப் ஆகி விட்டது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.
160 கோடி
இயக்குநர் அயன் முகர்ஜி இயக்கத்தில் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப் பச்சன், நாகார்ஜுனா, ஷாருக்கான் மற்றும் மெளனி ராய் நடிப்பில் கடந்த வாரம் வெளியான பிரம்மாஸ்திரம் திரைப்படம் முதல் 2 நாட்களிலேயே உலகளவில் 160 கோடி வரை வசூல் செய்ததாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால், அதன் பின்னர் எந்தவொரு வசூல் நிலவரத்தையும் படக்குழு வெளியிடவில்லை.
பாலிவுட்டை காப்பாற்ற வந்த பிரம்மாஸ்திரம்
190 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அமீர்கானின் லால் சிங் சத்தா படம் 45 கோடி கூட வசூலிக்காத நிலையில், படு தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், 160 கோடிக்கும் அதிகமாக பிரம்மாஸ்திரம் வசூல் செய்ததும் பாலிவுட்டை காக்க வந்த பிரம்மாஸ்திரம் என பிரபலங்கள் ட்வீட் போட ஆர்ம்பித்தனர். ஆனால், பிரம்மாஸ்திரம் அதன் முழு பட்ஜெட்டையே வசூல் செய்யுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
வசூல் சரிவு
ஞாயிற்றுக்கிழமை வரை ஏற்கனவே புக் பண்ணவர்கள் படத்தை பார்த்த நிலையில், திங்கள் முதல் படத்தின் வசூல் மீண்டும் பழைய குருடி கதவை திருடி என்கிற நிலைக்கு சென்று விட்டதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஏற்கனவே ரியல் பாக்ஸ் ஆபிஸை மறைத்து பொய்யான வசூல் நிலவரத்தை கரண் ஜோஹர் சொல்கிறார் என கங்கனா ரனாவத் மற்றும் பாய்காட் கேங் உள்ளிட்டோர் புகார் தெரிவித்து வந்த நிலையில், நிலைமை இப்படி ஆகிடுச்சே சிவாஜி என பலரும் ஃபீல் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.
400 கோடி வருமா
படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் 410 கோடி என தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இதுவரை இந்தியாவில் மட்டும் 150 கோடி ரூபாயை பிரம்மாஸ்திரம் படம் வசூல் செய்துள்ளது. உலகளவில் 200 முதல் 230 கோடி வரை வசூல் வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 2வது வாரமும் எந்த சிக்கலும் இல்லாமல் படம் ஓடினால் 300கோடி வசூலை எட்டும் என்கின்றனர். ஆனால், 400 கோடி வசூலையாவது படம் எட்டினால் தான் ஹிட் என்கிற நிலைமைக்கே செல்லும் என்றும் அதிரடி தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்ரம் வேதா வருது
இந்த மாத இறுதியில் ஹ்ரித்திக் ரோஷன், சைஃப் அலி கான் நடிப்பில் உருவாகி உள்ள விக்ரம் வேதா படம் திரைக்கு வருகிறது. பிரம்மாஸ்திரம் படத்துக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், குறைவான பட்ஜெட்டில் உருவாகி உள்ள அந்த படம் மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.