“எந்த நோக்கத்திற்காக தேமுதிக ஆரம்பிக்கப்பட்டதோ, அதை நிச்சயம் அடைவோம்” – பிரேமலதா நம்பிக்கை

சென்னை: “தலைவர் விஜயகாந்தின் உடல்நலத்தில் தற்போது சிறு தொய்வு இருந்தாலும், எந்த நோக்கத்திற்காக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அதை ஒட்டுமொத்த தொண்டர்கள் துணையோடும், மக்களின் ஆதரவோடும், தெய்வத்தின் ஆசியோடும் நிச்சயம் நாங்கள் அடைவோம்” என்று தேமுதி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேமுதிக 18-ம் ஆண்டு தொடக்க நாளையொட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இந்தக் கட்சி திமுக, அதிமுக என்ற மாபெரும் இரண்டு இயக்கங்கள் இருக்கும்போதே, மாபெரும் தலைவர்கள் இருந்தபோதே கட்சியின் நிறுவனத் தலைவர் விஜயகாந்தால் தொடங்கப்பட்டது.

மக்களுக்காக உழைத்து, தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக லஞ்சம், ஊழலுக்கு அப்பாற்பட்டு நேர்மையாக வறுமையே இல்லாத ஒரு தமிழகமாக உருவாக்க வேண்டும் என்ற நல்ல லட்சியத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி.

தலைவர் விஜயகாந்தின் உடல்நலத்தில் தற்போது சிறு தொய்வு இருந்தாலும், எந்த நோக்கத்திற்காக இந்தக் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அதை ஒட்டுமொத்த தொண்டர்கள் துணையோடும், மக்களின் ஆதரவோடும், தெய்வத்தின் ஆசியோடும் நிச்சயம் நாங்கள் அடைவோம்.

தற்போது வரை எங்கள் கட்சியின் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறோம். எனவே கூட்டணியைப் பற்றி எந்தவொரு முடிவோ, அறிவிப்போ எடுக்கவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் சற்றே இரண்டு ஆண்டுகள் உள்ளது. எனவே அந்த நேரத்தில் தலைவரால் நல்ல முடிவெடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.