சென்னை: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வரும் மீரா மிதுனை கைது செய்ய போலீஸாருக்கு பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்தும் ஏன் இன்னும் அவரை கைது செய்து ஆஜர்படுத்தவில்லை என்கிற நீதிமன்றத்தின் கேள்விக்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.
பட்டியலினத்தவர் குறித்து அவதூறு கருத்து கூறிய மீரா மிதுனுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
வழக்கில் ஆஜராகாமல் இருந்து வந்த அவர், தலைமறைவு ஆகிவிட்டதாக போலீஸார் தெரிவித்து இருந்தனர்.
மீரா மிதுன் மீது வழக்கு
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டதாக, நடிகை மீரா மிதுன் மீதும், உடந்தையாக இருந்ததாக அவரது நண்பர் சாம் அபிஷேக் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்தனர்.
பிடி வாரண்ட்
பின்னர் ஜாமீனில் விடுதலையான இவர்களுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் 6 ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மீரா மீதுன் ஆஜரகாததால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளி வர முடியாத கைது வாரண்ட் பிறப்பித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டிருந்தார்.
பெங்களூருவில் தலைமறைவு
இந்நிலையில் இந்த வழக்கு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், நீதிமன்ற உத்தரவின்படி மீராமிதுனை வேளச்சேரி மற்றும் சேத்துப்பட்டில் தேடியும் கிடைக்கவில்லை எனவும், அவர் பெங்களூருவில் இருப்பதாக தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
விரைவில் கைது
தலைமறைவாக உள்ள நடிகை மீரா மிதுன் பெங்களூருவில் இருப்பதாகவும், அவரை விரைந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாகவும் காவல் துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, வழக்கின் விசாரணையை இரு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளார். உடனடியாக பெங்களூருக்கு விரைந்து மீரா மிதுனை போலீஸார் கைது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தனது ஆண் நண்பருடன் கேரளாவில் ஒளிந்திருந்த மீரா மிதுனை போலீஸார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.