குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ.200 கோடி மதிப்பிலான போதைப்பொருள் – பாகிஸ்தானியர் 6 பேர் கைது

குஜராத் கடற்கரையில் ரூ.200 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்களை கடத்தி வந்த பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். அண்மைக்காலங்களில் குஜராத் கடற்கரை பகுதிகளில் பிடிபட்ட போதைப்பொருட்கள் எவ்வளவு? என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
அண்மை காலங்களாக குஜராத் மாநிலத்தில் போதைப்பொருட்கள் அதிகளவில் பிடிப்பட்டு வருகிறது. கடல் வழியாகத்தான் வெளிநாடுகளில் இருந்து போதைப்பொருட்கள் அதிகளவில் இந்தியாவுக்கு கடத்தி வரப்படுகின்றன. இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையுடன் இணைந்து குஜராத் தீவிரவாத தடுப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்துக்கு அருகே இணைந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது. அப்போது ஜக்காவ் கடலோர பகுதியில் இருந்து 33 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் பாகிஸ்தானின் மீன்பிடி படகு ஒன்று இந்திய நீர்வழி பகுதியில் 6 கிலோ மீட்டர் வரை நுழைந்து இருந்தது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து இந்திய கடலோர காவல்படையினர் இரண்டு விரைவு படகில் துரத்திச்சென்று பாகிஸ்தான் படகை தடுத்து நிறுத்தினர். பின்னர் படகில் சோதனை செய்தனர். கடலோர காவல் படையினரும், தீவிரவாத தடுப்பு பிரிவினரும் படகில் நடத்திய சோதனையில் மொத்தமாக 40 கிலோ எடை கொண்ட ஹெராயின் போதை பொருள் சிக்கியது. இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும். இந்த போதை பொருட்கள் கடத்தப்பட்டு வந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து ரூ.200 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
image
அதோடு பாகிஸ்தானின் மீன்பிடி படகும் கைப்பற்றப்பட்டது. போதை பொருள் கடத்தி வந்தது தொடர்பாக பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், ’’பாகிஸ்தானில் இருந்து புறப்படும் படகில் ஹெராயின் கடத்தப்படுவதாக எங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. குஜராத்தில் அவை தரை இறக்கப்பட்டு பஞ்சாப்புக்கு சாலை வழியாக கொண்டு செல்லப்படுவதாக அறிந்தோம். இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் படகை வழி மறித்து பிடித்தோம். 40 கிலோ ஹெராயினுடன், 6 பாகிஸ்தானியர்களை கைது செய்தோம். இவ்வாறு அவர் கூறினார். குஜராத் தீவிரவாத தடுப்பு படையினரும், கடலோர காவல் படையினரும் இதே போன்று கடந்த காலங்களில் குஜராத் கடல் பகுதி வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்த முயன்றதை முறியடித்து இருந்தனர். வெளிநாட்டை சேர்ந்தவர்களை அதிக அளவு போதை பொருளுடன் பிடித்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மிக முக்கியமாக கடந்த பிப்ரவரி மாதம் குஜராத் கடற்கரை அருகே ஒரு படகில் இருந்து சுமார் ரூ.2000 கோடி சந்தை மதிப்பிலான 800 கிலோ போதை பொருட்கள் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது’’ என்றார்.
image
குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு பிடிக்கப்பட்ட போதைப்பொருட்களின் விவரங்கள்:
1) இந்தாண்டு தொடக்கத்தில் குஜராத் கடற்கரை அருகே ஒரு படகில் இருந்து சுமார் 2000 கோடி ரூபாய் சந்தை மதிப்பிலான 800 கிலோ போதை பொருட்களை கடற்படையுடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கடந்த பிப்ரவரி மாதம் பறிமுதல் செய்தனர்.
2) இதுவரை குஜராத் மாநிலத்தில் கைப்பற்றப்பட்டதில் இது மிகப் பெரிய பறிமுதலாக பார்க்கப்பட்டது.
3) இந்த ஆண்டு மே மாதம் ரூ.500 கோடி போதைப்பொருட்களும், ஜூலை மாதம் ரூ.375 கோடி போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டன.
4) குஜராத்தில் கடந்த ஆகஸ்ட் 16-ந் தேதி 513 கிலோ எம்.டி.போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1,026 கோடி ஆகும். மேலும் போலீசார் போதை பொருள் ஆலை நடத்தி வந்த கிரிராஜ் தீக்சித்தையும் கைது செய்தனர்.
5) இந்திய கடற்பகுதியில் இந்திய கடலோர காவல்படை மற்றும் குஜராத் தீவிரவாத எதிர்ப்புப் படை இணைந்து பாகிஸ்தானிலிருந்து படகு மூலம் கடத்தி வரப்பட்ட 200 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை இன்று பறிமுதல் செய்தனர்.
– விக்னேஷ்முத்துSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.