தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். வல்லுநர் குழுக்களான லோகூர் குழு 1965 ஆம் ஆண்டிலும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு 1967 ஆம் ஆண்டிலும், இந்த சமூகத்தினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க பரிந்துரைத்தன.
மேலும், தமிழ்நாடு அரசின் பரிந்துரைகளின் அடிப்படையில், “குருவிக்காரர் குழுவினருடன் இணைந்த நரிக்குறவர்” சமூகத்தினரை, தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் திட்டத்திற்கு இந்திய தலைமைப் பதிவாளர் ஒப்புக் கொண்டுள்ளதாக, ஒன்றியப் பழங்குடியினர் விவகாரங்கள் துறையின் இயக்குநர் கடிதம் மூலமாக கடந்த 2013ஆம் ஆண்டே தெரிவித்துள்ளார்.
ஆனாலும், தமிழ்நாட்டில் நரிக்குறவர், குருவிக்காரர் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையில் தொடர்ந்து தாமதமே ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக பல கோரிக்கைகள் அளிக்கப்பட்டிருந்தும், இந்த சமூகத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தன.
இந்த நிலையில், நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பழங்குடியினர் பட்டியலில் விடுபட்டிருந்த சமூகத்தினரையும் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் இனி இப்பிரிவினருக்கும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய பழங்குடியின நலத்துறை அமைச்சர் அர்ஜூன் முன்டா, “பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் பழங்குடியினத்துறை சார்பில் வைக்கப்பட்ட திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன்படி, இமாச்சலப்பிரதேசத்தில் டிரான்ஸ்-கிரி பகுதியில் வசிக்கும் ஹத்தி சமூகத்தினரை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளி்க்கப்பட்டது. இதன் மூலம், 1.60 லட்சம் பேர் பயன் அடைவார்கள்.” என்றார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பிரிஜ்ஜா சமூகத்தையும் பழங்குடியினப் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளி்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அர்ஜூன் முன்டா, தமிழகத்தில் மலைப்பகுதிகளில் வசிக்கும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள நரிக்குறவர் சமூகத்தினரையும் பழங்குடியினர் பிரிவில் சேர்க்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததில் இருந்தே நரிக்குறவர், இருளர், குருவிக்காரர்கள் சமூகத்தினர் மீது முதல்வர்
கூடுதல் அக்கறை எடுத்து வருகிறார். பல ஆண்டுகளாக அவர்களுக்கு எட்டாக் கனியாக இருந்த வீட்டுமனை பட்டாக்கள், குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதிச் சான்றிதழ்கள், நல வாரிய அட்டைகள், முதியோர் உதவித்தொகைக்கான ஆணைகள், இருளர் (ST) சாதி சான்றிதழ்கள், நரிக்குறவர் (MBC) சாதிச் சான்றிதழ்கள், பயிற்சிக்கான ஆணைகள், வங்கிக் கடனுதவிகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கிடைக்க முதல்வர் ஸ்டாலின் வழிவகை செய்தார்.
அதேபோல், நரிக்குறவர், குருவிக்காரர் சமூகத்தினர் நீண்டநாள் கோரிக்கையான பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடந்த மார்ச் மாதம் கடிதமும் எழுதியிருந்தார். இந்திய அரசியலமைப்பின்படி, இதுபோன்ற மாற்றங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் சட்டமியற்றியே கொண்டு வர வேண்டும் என்ற நிலையில், நரிக்குறவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நரிக்குறவர்கள் மிகவும் பின்தங்கிய மற்றும் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய சமூகங்களில் ஒன்று பழங்குடியினர் பட்டியலில் அவர்களைச் சேர்ப்பதன் மூலம், அவர்கள் அனைத்து அரசமைப்பு ரீதியிலான பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களைப் பெறத் தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.