திருச்சியைச் சேர்ந்தவர் மன்சூர் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). இவர், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 13.9.2022-ம் தேதி கொடுத்த புகாரில், “நான் மேற்கண்ட முகவரியில் என்னுடைய அம்மா, அப்பாவுடன் வசித்து வருகிறேன். தற்போது நான், இன்ஜினீயரிங் படித்துவிட்டு சென்னை போரூரில் உள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலைப்பார்த்து வருகிறேன். அதனால், என்னுடைய நண்பர்களுடன் சென்னையில் தங்கியிருக்கிறேன். இந்த நிலையில், என்னுடைய அப்பாவின் முகநூலுக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒரு பெண்ணின் முகநூல் கணக்கிலிருந்து மெசேஜ் வந்துள்ளது. அதற்கு என்னுடைய அப்பா பதிலளித்துள்ளார்.
பின்னர் என் அப்பாவுக்கு மெசேஜ் அனுப்பிய பெண், தன்னுடைய டெலிகிராமிக்கு மெசேஜ் அனுப்பச் சொல்லியிருக்கிறார். அதனால் என்னுடைய அப்பாவும் மெசேஜ் அனுப்பி அந்தப் பெண்ணுடன் சகஜமாக பேசிவந்துள்ளார். பின்னர் என்னுடைய அப்பா, அம்மாவின் புகைப்படத்தை அந்தப் பெண் கேட்டுள்ளார். இதையடுத்து போட்டோஸ்களை என்னுடைய அப்பா டெலிகிராமில் அந்தப் பெண்ணுக்கு அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து 12.9.2022-ம் தேதி அப்துல்லா என்பவர், என்னுடைய அப்பாவிடம் போனில் பேசியுள்ளார். அப்போது அவர், என்னுடைய அப்பாவிடம், `உங்களின் ஆபாச புகைபடங்களை சமூகவலைதளங்களில் வெளியிடாமலிருக்க ஏழு லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்’ என்று கூறி மிரட்டியுள்ளார். இதையடுத்து சோகமடைந்த என்னுடைய அப்பா எனக்கு தகவல் தெரிவித்தார்
உடனே நான் அப்துல்லாவுக்கு போன் செய்து பேசினேன். அப்போது அவர் 13.9.2022-ம் தேதி காலை 9 மணிக்கு மண்ணடி தெரு, பவளக்கார தெரு சந்திப்புக்கு பணத்தைக் கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறினார். அதனால் அப்துல்லா கூறிய இடத்துக்குச் சென்று நான் அவரைச் சந்தித்து பணத்தை ஏற்பாடு செய்யவில்லை என்று கூறினேன். உடனே அவர், பணத்தை கொடுக்கவில்லை என்றால் ஆபாச படங்களை இணையதளத்தில் வெளியிடப்போவதாக கூறி அங்கிருந்து சென்றுவிட்டார். அதைக் கேட்டு எனக்கு மிகவும் அதிர்ச்சியாகிவிட்டது. எனவே அப்துல்லாமீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து முத்தியால்பேட்டை போலீஸார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பெண் குரலில் பேசி ஏழு லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியது சென்னை ஏழு கிணறு பகுதியைச் சேர்ந்த அப்துல்லா (32) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைதுசெய்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய செல்போன், இரண்டு ஹார்டு டிஸ்குகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப்பிறகு நீதிமன்றத்தில் அப்துல்லா ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.