கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜகவினரின் பேரணியில் நேற்று கலவரம் நடந்த நிலையில் மாநிலத்தில் வன்முறையை நிகழ்த்த பாஜக பிற மாநிலங்களில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் ஆட்களை அழைத்து வந்துள்ளது என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இங்கு ஹாட்ரிக் அதாவது 3வது முறையாக மம்தா பானர்ஜி ஆட்சியை பிடித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவியது. இருப்பினும் பாஜகவை விட அதிக இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும்பான்மையுடன் மம்தா ஆட்சி கட்டிலில் அமர்ந்தார்.
திரிணாமுல் காங்கிரஸ்- பாஜக மோதல்
இந்நிலையில் தான் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் இடையே வார்த்தை போர் வெடித்து வருகிறது. பாஜக தலைவர்கள் தொடர்ச்சியாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர். இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. அதேபோல் மத்தியில் ஆளும் பாஜக அரசின் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இதற்கிடையே தான் ஊழல் குற்றச்சாட்டில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அமைச்சர்கள், பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பாஜக பேரணி
இந்நிலையில் தான் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஊழல் செய்கிறது எனக்கூறி நேற்று மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் பாஜக சார்பில் சட்டசபையை நோக்கி‛நபன்னா அபியான்’ என்ற பெயரில் பேரணி நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பாஜக கட்சியின் கொல்கத்தா நோக்கி சென்றனர். ஆனால் பேரணிக்கு போலீசார் அனுமதி கொடுக்காத நிலையில் போலீசார் பல இடங்களில் திரண்டு நின்று பாஜகவினரை தடுத்து கைது செய்தனர்.
போலீஸ் மீது தாக்குதல்-தீவைப்பு
மேலும் கூட்டமாக ஒன்றிணைந்து பேரணி சென்றவர்கள் மீது போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். மேலும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் கோபமடைந்தவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் வாகனத்திற்கு தீவைத்தனர். அதோடு போலீஸ்காரர்களை விரட்டி விரட்டி தாக்கினர். இருப்பினும் போலீசார் போராடி பேரணியில் பங்கேற்றவர்களை விரட்டியடித்தனர். மேலும் பலர் கைது செய்யப்பட்டனர்.
மம்தா பானர்ஜி விமர்சனம்
மேலும் மாநிலத்தில் உள்ள நிலவரம் குறித்து இன்று முதல்வர் மம்தா பானர்ஜி அதிகாரிகளிடம் கேட்டு அறிந்து கொண்டார். இதன் தொடர்ச்சியாக மாநில அரசுக்கு எதிராக போராட்டங்கள் என்ற பெயரில் பிற மாநிலங்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்து வன்முறையை பாஜக கட்டவிழ்த்து விட்டதாக அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது:
பொறுத்து கொள்ள முடியாது
மாநிலத்தில் வன்முறையை நடத்த பாஜக கட்சி பிற மாநிலங்களில் இருந்து வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் ஆட்களை அழைத்து வந்துள்ளனர். நேற்றைய வன்மறையில் பல போலீசார் காயமடைந்துள்னளர். சமூக விரோத செயல்களுடன் ஒருபோதும் கைகோர்த்து செல்ல முடியாது. தீ வைப்பு மற்றும் போலீசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விஷயத்தில் சட்டம் அதன் கடமையை செய்யும். அமைதியான போராட்டம் என்பது ஒருபோதும் பிரச்சனையாக இருக்காது. ஆனால் அத்துமீறலை பொறுத்து கொள்ள முடியாது” என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.