மட்டக்களப்பில் பாடசாலை மாணவிகளுக்கு பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜீ. சுகுணனின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதனடிப்படையில் சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலை மாணவிகளுக்கு பப்பிலோமா வைரஸ் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு பாடசாலை அதிபர் அருட் சகோதரி மேரி நிதாஞ்சலி தலைமையில் இன்று (14) இடம்பெற்றது.
மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியகலாநிதி இ.உதயகுமாரின் வழிநடாத்தலில், கல்லடி பொது சுகாதார பரிசோதகர் எஸ்.அமீர்தாப், கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் த.மிதுன் மற்றும் புளியந்தீவுக்கு பொறுப்பான சுகாதார பரிசோதகர் எஸ்.தீபக்குமார் மற்றும் சுகாதாரப் பிரிவு உத்தியோகத்தர்களினால் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு சிசிலியா தேசிய பாடசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தேசிய தடுப்பு மருந்தேற்றல் திட்டத்தின் கீழ் 2017ஆம் ஆண்டு முதல் இலவசமாக கருப்பைக்கழுத்து புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி வழங்கப்பட்டு வருகின்றது. இத்தடுப்பூசி தொற்று எற்பட முன்னர் வழங்குவதன் மூலம் மட்டுமே இப்புற்றுநோய் உருவாகுவதை தடுக்கமுடியும்.
இதனடிப்படையில் 10 வயது பூர்த்தியடைந்த தரம் 6 இல் கல்வி கற்கும் அனைத்து பெண் பிள்ளைகளுக்கும் ஆறுமாத கால இடைவெளியில் இரு தடவை இத்தடுப்பூசி வழங்கப்படவேண்டும். இலங்கையை பொறுத்தவரையில் வருடத்துக்கு 850 – 950 பெண்கள் கருப்பைக்கழுத்து புற்றுநோய் அதிகரித்த நிலையில் இனம் காணப்பட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.