ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் கடந்த 11-ம் தேதி இமானுவேல் சேகரனின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது பல்வேறு அரசியல் கட்சியினர், சமுதாயத் தலைவர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
அந்த வகையில், பா.ஜ.க சார்பில் முன்னாள் அமைச்சரும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் தலைமையில் ஏராளமான பா.ஜ.க-வினர் அஞ்சலி செலுத்தினர்.
நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும்போது, பொன் பாலகணபதி அருகில் இருந்த பா.ஜ.க பெண் நிர்வாகிமீது தொடுவது போன்றும், அதனை அந்தப் பெண் நிர்வாகி தடுப்பது போன்றும் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த வீடியோ விவகாரம் அரசியல் அரங்கில் சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், இது குறித்து ராமநாதபுரம் பா.ஜ.க மாவட்டத் தலைவர் கதிரவன் விளக்கம் அளித்திருக்கிறார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் தொண்டர்களுடன் அஞ்சலி செலுத்த வந்தபோது கூட்ட நெரிசலில் நாங்கள் நிலை தடுமாறினோம். அப்போது யதார்த்தமாக கீழே கம்பியில் மாட்டிக்கொண்டதை எடுத்து பொன் பாலகணபதி உதவி புரிந்துள்ளார். அவரை தி.மு.க-வினரும், சில அமைப்புகளும் சித்திரித்து வீடியோ பரப்பி வருகின்றனர்.
தமிழகத்தில் பா.ஜ.க வளர்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தி.மு.க-வினர் திட்டமிட்டு விஷ பிரசாரம் செய்து வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பான இயக்கம் பா.ஜ.க, இந்த மாதிரி இயக்கம் உலகத்தில் எங்கும் கண்டுபிடிக்க முடியாது. இது குறித்து மேலிடத்தில் ஆலோசனை நடத்தி இந்த வீடியோ பரப்பிய நபர்மீது போலீஸில் புகார் அளிக்கவிருக்கிறோம்” என்றார்.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தவுள்ளது. அதனடிப்படையில் வருகிற 26-ம் தேதி எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டுமென தேசிய மகளிர் ஆணையம் பொன்பாலகணபதிக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் ஆணையம் வெளியிட்டுள்ளது.