ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டமும் இணைந்து இலங்கையில் சோளப் பயிர்ச் செய்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், 1.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள 200 மெட்ரிக் டொன் ஹைப்ரிட் சோள விதைகளை வழங்குவதற்கு நேற்று (13) இணக்கம் தெரிவித்தன.
நேற்று (13) காலை கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் விவசாய, வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மகிந்த அமரவீரவின் பங்குபற்றலுடன், ஆதரவு தெரிவிக்கும் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன்போது, இந்தப் பருவத்தில் 15,000 ஹெக்டேரில் சோளம் பயிரிடுவதற்கு 200 மெட்ரிக் டொன் சோள விதைகளை JICA; நிறுவனமும் UNDP நிறுவனமும் இலங்கைக்கு நன்கொடையாக வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்தன.
இந்த நிகழ்விற்கு, JICA நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி யமாடா டெட்சுயா மற்றும் UNDP நிறுவனத்தின் இலங்கை அலுவலகத்தின் தலைவர் மாலின் ஹெர்விக், விவசாய அமைச்சின் மேலதிக செயலாளர்களான கலாநிதி காமினி சமரசிங்க மற்றும் பி. மாலதி, விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் திரு.அஜந்த டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.
குறிப்பாக கால்நடைகளுக்கான உணவு மற்றும் திரிபோஷா தயாரிப்பதற்கான சோள இருப்பு இல்லாததால் திரவ பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது. மேலும் அவற்றின் விலையும் அதிகரித்து வருகிறது. இரசாயன உரங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால், கடந்த பருவத்தில் சோளம் உற்பத்தி 90,000 மெட்ரிக் டொன் வரை வீழ்ச்சியடைந்துள்ளது. இம்முறை சிறுபோகத்திலும் சோளம் விளைச்சல் 60% வரை குறைந்துள்ளது. இதன் காரணமாக இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு நிலைமைகள் வீழ்ச்சியடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயங்களை கருத்தில் கொண்டு, 2022/23 பெரும்போகத்தில் சோளப் பயிர்ச் செய்கையை பிரபலப்படுத்த விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன், சோளப் பயிர்ச்செய்கைக்காக தற்போது விவசாய அபிவிருத்தி திணைக்களத்தில்; பதிவுசெய்யப்பட்ட நிலத்தின் அளவு 125,000 ஹெக்டேர்களாகும். எனினும் தற்போது நாட்டில் 50,000 ஹெக்டேயருக்கு போதுமான சோள விதைகளே உள்ளன. விவசாய திணைக்களத்தில் 10,000 ஹெக்டேயருக்கு போதுமான விதைகள் உள்ளதாகவும், இந்த உதவியின் மூலம் 75,000 ஹெக்டேர் சோளத்தை பயிரிட முடியும் என்றும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மீதமுள்ள 50,000 ஹெக்டேருக்கான விதைகளை பெற்றுக் கொள்வதற்காக பல்வேறு அமைப்புகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கைக்கான JICA நிறுவனத்தின் பிரதிநிதி யமாடா டெட்சுயா இதன்போது கருத்துத் தெரிக்கையில், சோளப் பற்றாக்குறையினால் இலங்கையில் கால்நடை மற்றும் விலங்கு உற்பத்தி உற்பத்தி வீழ்ச்சிக் கண்டுள்ளன. எனவே, இலங்கை மக்களின் போசாக்கு நிலையை உயர்த்துவதற்காக இந்த சோள விதைகளை பெற்றுத் தருவோம் என்று தெரிவித்தார்.
இந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கைக்கு இந்த உதவியை மிகவும் திறமையாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று UNDP நிறுவனத்தின் தலைவர் மாலின் ஹெர்விக் தெரிவித்தார்.
இலங்கையின் உலர் வலயத்தில் சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு குறித்த காலத்திற்குள் இந்த சோள விதைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.