உத்தராகண்டில் ஒரு பள்ளி கழிவறையின் உட்கூரை இடிந்து விழுந்ததில் 8 வயது மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தராகண்ட் மாநிலம் சாம்பவாத் மாவட்டத்தில் பட்டி பகுதியில் மன்கண்டே தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயன்றுவரும் 8 வயது மாணவர்களான சந்தன், சோனி, ரிங்கு மற்றும் ஷகுனி ஆகிய நால்வரும் கழிவறைக்கு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சந்தன் என்ற மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மற்ற 3 பேரும் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்ளூர் மக்கள் கூறுகையில், பள்ளி நிர்வாகத்திடம் பாழடைந்த கட்டடம் குறித்து பலமுறை புகார் அளித்துவிட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை. அப்படி எங்கள் புகார்மீது நடவடிக்கை எடுத்திருந்தால் ஒரு சிறுவனின் உயிர் போயிருக்காது என்கின்றனர்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்துசென்ற மருத்துவ குழு, மாணவர்களை பரிசோதித்தனர். உத்தராகண்ட் மாநிலத்திலுள்ள பல பள்ளிகள், குறிப்பாக மலைப்பகுதிகளில் உள்ள பள்ளி கட்டடங்கள் பாழடைந்த நிலையிலேயே இருப்பதாக புகார்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM