திருமலை: ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டம், பாகால மண்டலம் பட்டிப்பாடி வாரிப்பள்ளியை சேர்ந்தவர் துளசி பிரசாத்(30). இவரும் மதனப்பள்ளி சந்திரா காலனியை சேர்ந்த 26 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 12ம் தேதி பெரியோர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது. தொடர்ந்து மணப்பெண் வீட்டில் முதலிரவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அன்றிரவு முதலிரவு அறைக்கு புதுமண தம்பதிகளை சடங்குகள் செய்து அனுப்பி வைத்தனர். அறைக்குள் சென்ற சில நிமிடங்களில் துளசி பிரசாத் மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மணப்பெண் அறையில் இருந்து வெளியே வந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதையடுத்து துளசி பிரசாத்தின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. திருமணத்திற்காக வீட்டில் கட்டப்பட்ட வாழைமர தோரணங்கள் இன்னும் பசுமையாகவே உள்ள நிலையில், அதே வீட்டின் முன் புதுமாப்பிள்ளை சடலமாக வைக்கப்பட்ட சம்பவம் குடும்பத்தினரையும், கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் குறித்து போலீசார் விவரங்களை சேகரித்து விசாரித்து வருகின்றனர்.